அதிக பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட போர் எது தெரியுமா ? - Detailed Report
உலக அளவில் நடைபெற்ற மிகப் பெரிய போர்களில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
ஆட்சியாளர்கள் தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அல்லது அதிகாரத்தை பிடிப்பதற்காகவும் போர் நடத்துகின்றனர். இது கல்வியறிவற்ற காலம் முதல் தொழில்நுட்ப புரட்சி உச்சத்தில் இருக்கிற தற்போது வரை தொடர்கிறது. போரில் புதுப்புது ரசாயன குண்டுகளை எப்படி பயன்படுத்துவது என சில நாடுகள் சோதனையும் நடத்தி வருகின்றன. ஒருவேளை போர் ஏற்பட்டால் அவற்றில் மிக முக்கியமாக சில விதிகளை கடைபிடிக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றகள் வலியுறுத்துகின்றன.
அவற்றில் முக்கியமான ஒன்று பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், பத்திரிகையாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோரை எக்காரணம் கொண்டும் கொல்லக் கூடாது எனவும், தடைசெய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகள், கல்வி மற்றும் மருத்துவமனை நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது எனவும் சர்வதேச சட்டங்கள் வலியுறுத்துகின்றன. அவை வெறும் ஏட்டுச் சுரைக்காய் போல வெற்றுக் காகிதங்களாகவே இருப்பதுதான வேதனை. இந்த நிலையில் உலகம் முழுவதும் நடைபெற்ற முக்கியமான போர்கள் குறித்தும் போரில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் குறித்தும் விரிவாக காணலாம்.
முதல் உலகப் போர் ( 1914 –1918 )
முதல் உலகப்போர் தொடங்க, முக்கிய காரணமாக இருந்தது, ஆஸ்திரிய இளவரசர் ஃபிரான்ஸ் பெட்டினாண்ட் ((Franz Ferdinand ))படுகொலைதான். இதனை நிகழ்த்தியவர் செர்பிய நாட்டைச் சேர்ந்த கவ்ரிலோ பிரன்சிப் ((Gavrilo Princip)) என்பவர். காலனிய நாடுகளை தன் காலடியில் வைத்துக்கொள்ள விரும்பிய ஆஸ்திரிய பேரரசு, இளவரசரின் படுகொலையை காரணம் காட்டி, செர்பியாவின் மீது போரை தொடங்கியது.
ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக, ஜெர்மனி, துருக்கி, ஒட்டமான் பேரரசு உள்ளிட்டவை களத்தில் இறங்கின. அதேநேரம் ரஷ்யாவின் எல்லைக்குள் இருந்த, செர்பியாவுக்கு ஆதரவாக ரஷ்யா, இங்கிலாந்து பேரரசின் கீழ் இருந்த இந்தியா உள்ளிட்ட காலனிய நாடுகளும், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் களமிறங்கின.
1914 ஜூலை 28-ந் தேதி தொடங்கிய, முதல் உலகப் போர், 1918 நவம்பர் 11-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த போரால் பல நாடுகள் சிதைவுற்றிருந்தன. சில நாடுகள் புதிதாக முளைத்திருந்தன. ஒட்டுமொத்தமாக 97 லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒரு கோடி அப்பாவி மக்களும் உயிரிழந்தனர். இப்போரில் கொல்லப்பட்ட மொத்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் முழுமையாக கிடைக்கவில்லை.
இரண்டாம் உலகப்போர் ( 1939 - 1945)
1939-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி ஹிட்லரின் நாஜிப்படை அண்டை நாடான போலந்தை ஆக்கிரமிப்பதற்காக படையெடுத்தது. இந்த நாள்தான் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய நாளாக வரலாற்று ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தலைமையிலான ‘அச்சு நாடுகள்’ அணியும், இங்கிலாந்து தலைமையிலான ‘நேச நாடுகள்‘ அணியும் மோதின.
ஜெர்மனி அணியில் இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்று இருந்தன. நேச நாடுகள் அணியில் பிரான்ஸ், அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகித்தன. அப்போது சர்வாதிகாரி முசோலினி இத்தாலியின் அதிபராக இருந்தார். போர் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இரு அணிகளிலும் ஒருசில நாடுகளே இருந்தன. ஆனால் போரின் போக்கு மாற மாற மேலும் பல நாடுகள் களத்தில் குதிக்க வேண்டிய நிலை உருவானது.
இந்த போரில் உலகம் முழுவதும் சுமார் 25 லட்சம் இந்திய வீரர்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீர மரணம் அடைந்தனர்.உலக வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் கிட்டத்தட்ட 10 கோடி வீரர்கள் பங்கேற்றனர். 7 ஆண்டுகள் நீடித்த போரில் வீரர்கள், அப்பாவி பொதுமக்கள் என சுமார் 8½ கோடி பேர் உயிர் இழந்தனர். இந்த நிலையில் 6வருடம் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் செய்திகளை சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் 69பேர் கொல்லப்பட்டனர்.
வியட்நாம் போர்
வடக்கு வியட்நாமுக்கும், அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற தெற்கு வியட்நாமுக்கும் இடையே 1955 முதல் 1975 வரை வியட்நாம் போர் நீடித்தது. ஆஸ்திரேலியா, தென் கொரியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இப்போரில் தெற்கு வியட்நாமுக்கு ஆதரவாக ராணுவத்தை அனுப்பின. இப்போரில் வடக்கு வியட்நாமுக்கு சோவியத் யூனியன் ஆதரவு அளித்தது. வியட்நாம் போரில் 8,744,000 அமெரிக்க வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் சுமார் 58 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 13 லட்சம் போர் வீரர்களும், 10 லட்சம் பொதுமக்களும் வியட்நாம் போரில் உயிரிழந்தனர். 20 வருடம் நடைபெற்ற இப்போரில் செய்திகளை களத்திலிருந்து வழங்கிய பத்திரிகையாளர்கள் 63பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் - ரஷ்யா போர் ( 2022 முதல் ) :
உக்ரைன் ரஷ்யா எல்லையில் கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றமான ஒரு சூழலே நிலவி வந்தது. இதனால உக்ரைன் மேற்குலக நாடுகளுடன் நெருக்கம் காட்டி வந்தது. குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் கூட இணையவும் உக்ரைன் ஆர்வம் காட்டியது. இது ரஷ்யாவுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், நேட்டோ படைகள் உக்ரைனில் இருக்கும் ரஷ்ய எல்லைக்கே வந்துவிடும்.
இது அந்நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதுகிறது ரஷ்யா. இதுவே போர் ஆரம்பிக்க முதல் காரணம். இதன் காரணமாக உக்ரைன் - ரஷ்யா போர் ஆரம்பித்து 1000 நாட்களை கடந்தும் நடைபெற்று வருகிறது. ரஷ்யா உக்ரைன் போரில் இதுவரை 622 குழந்தைகள் உட்பட 11,973க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3வருடங்களுக்கு மேலாக நடைபெறும் போரில் போர் செய்திகளை சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் 17பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் - ஃபாலஸ்தீனப் போர் ( Oct 7 , 2023 முதல் )
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய ஒருவருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் காசா பகுதியிலிருந்து இடம் பெயர்ந்தனர். இப்போரில் இதுவரை 44,250பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகாமானோர் காயமடைந்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் என்பது அதிகமாக உள்ளதாக சர்வதேச சேவை அமைப்புகள் அறிவித்துள்ளன.
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கட்டப் போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்து இஸ்ரேல் கொலை செய்தது. இதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹஸன் நஸ்ரல்லாஹ் வீட்டின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல் அவரையும் கொலை செய்தது. மேலும் சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் அடுத்த தலைவரான யஹ்யா சின்வாரும் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை காசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 1000க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஒரு வருடம் மட்டுமே கடந்துள்ள நிலையில் பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்டுள்ள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை மேற்சொன்ன அனைத்து போர்களைவிடவும் அதிகம் என புள்ளி விவரங்கள் சொல்கின்றன. பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் அமைப்பு (Committee to Protect Journalists ) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 180க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமானோர் பாலஸ்தீனியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- ச.அகமது , கட்டுரையாளர்