’ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா..? - வெளியான முக்கிய தகவல்...!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் , ஹெச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜயின் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு உள்ளது.
இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பிரேமலூ புகழ் மமிதா பைஜூ,பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று மாலை ஜனநாயகன் படத்தின் தளபதி கச்சேரி என்னும் பாடல் வெளியானது. விஜயின் ஹிட் பட பாடல்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் வகையில் வெளியாகியுள்ள இப்பாடல் துள்ளலுடனும், ஒரு வைப் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது. மேலும் யூடியூபில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் விஜயின் திரைப்படத்தின் மேல் எந்தளவு எதிர்ப்பார்ப்பு இருக்குமோ அதே அளவு எதிர்பார்ப்பு அப்படத்தின் இசை வெளியீட்டு விழா மீதும் இருக்கும். ஏனென்றால் இசை வெளியீட்டு விழாவில் நிகழும் விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகும். தற்போது விஜய் கட்சி ஆரம்பித்துள்ளதாலும், அவரின் கடைசி படம் என்பதாலும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா மீது கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது டிசம்பர் மாதம் 27-ந்தேதி மலேசியாவில் நடைபெறுவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.