வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் தகுதிச் சான்றிதழ் பெற எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற இந்திய மாணவர்கள் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கு இன்று (மார்ச்.5) முதல் ஏப்.30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவர்களுக்கான திறனறித் தேர்வு இந்த ஜூன் மாதத்தில் தேசிய தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, அத்தகைய தேர்வில் பங்கேற்பதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தால் வழங்கப்பட்ட தகுதிச் சான்று அவசியம். தகுதிச் சான்று இல்லாதவர்கள் என்எம்சி இணையப் பக்கத்தில் ஏப்ரல் 30-ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு என்எம்சி இணையதளத்தை அணுகலாம். கடந்த முறை தகுதிச் சான்று கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் பல்வேறு தவறுகள் இருந்தன. அதனைத் தவிர்க்கும் வகையில் விண்ணப்பதாராகள் சுயமாக அதனை பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
அசல் சான்றிதழ்களை கைகளில் வைத்துக்கொண்டு விண்ணப்பங்களை நிரப்பவும், தற்போது பயன்பாட்டில் உள்ள கைப்பேசி எண்ணை மட்டும் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில் தவறுகள், ஆட்சேபங்கள் குறித்து தகவல்களை அனுப்ப இயலாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.