டெஸ்லாவில் இருந்து வெளியேறிய இந்தியா திட்டங்களின் முக்கிய நபரான ரோஹன் படேல்!
டெஸ்லாவின் பொதுக் கொள்கை மற்றும் வணிக மேம்பாட்டிற்கான துணைத் தலைவர் ரோஹல் படேல் ஏப்ரல் 15 அன்று நிறுவனத்தை விட்டு வெளியேறினார். அவர் அதன் இந்திய விரிவாக்கத் திட்டங்களின் முக்கிய குழு உறுப்பினராக இருந்தார்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் வருகிற 21 ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தருவதாக அறிவித்து இருந்தார். இந்த வருகையின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்றும், இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டு திட்டங்களை அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர்நோக்கி உள்ளதாக எலான் மஸ்க்கும் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எலான் மஸ்க், தனது எக்ஸ் தள பக்கத்தில் "சில தவிர்க்கமுடியாத காரணங்களால் எனது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா வர உள்ளதை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, டெஸ்லாவின் பொதுக் கொள்கை மற்றும் வணிக மேம்பாட்டிற்கான துணைத் தலைவர் ரோஹல் படேல் ஏப்ரல் 15 அன்று நிறுவனத்தை விட்டு வெளியேறினார். அவர் அதன் இந்திய விரிவாக்கத் திட்டங்களின் முக்கிய குழு உறுப்பினராக இருந்தார். தொடர்ந்து, பவர்டிரெய்ன் மற்றும் எனர்ஜி இன்ஜினியரிங் துணைத் தலைவர் ட்ரூ பாக்லினோவும் ஏப்ரல் 15 அன்று நிறுவனத்தை விட்டு வெளியேறினார். இருவரும் நிறுவனத்திலிருந்து வெளியேறுவதாக எக்ஸ் தளத்தில் அறிவித்தனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மூத்த ஆலோசகராக காலநிலை மற்றும் எரிசக்தி பிரச்னைகள் மற்றும் பிற கொள்கை விஷயங்களில் பணியாற்றிய பின்னர் படேல் 2016 இல் டெஸ்லாவில் சேர்ந்தார்.