For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘இந்தியன் 2’ ரிலீஸ் தள்ளிப் போக காரணம் என்ன தெரியுமா?

07:22 AM Apr 09, 2024 IST | Web Editor
‘இந்தியன் 2’ ரிலீஸ் தள்ளிப் போக காரணம் என்ன தெரியுமா
Advertisement

இந்தியன் 2 திரைப்படம் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன் 2’. 1996-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டதுடன், வசூலையும் குவித்து தமிழ் சினிமாவின் பிரபல கமர்ஷியல் படமாக உருவெடுத்தது. கமல்ஹாசன் இப்படத்துக்காக தேசிய விருது வென்றார்.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி,  பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

அண்மையில், இந்தியன் 2 திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  இதனிடையே, ‘இந்தியன் 2’ திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதம் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

இதற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. அதாவது, படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் சிறப்பாக வர வேண்டும் என்பதில் இயக்குநர் ஷங்கர் தெளிவாக இருக்கிறாராம். இதனால், கூடுதல் அக்கறை எடுத்து கிராஃபிக்ஸ் பணிகளை கவனிக்க இருக்கிறார். இதற்கிடையில் ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படத்தையும் அவர் இயக்கி வருகிறார். இதனால், முழுமையாக ‘இந்தியன்2’ கிராஃபிக்ஸ் பணிகளுக்காக அடுத்த மாதம் குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார் ஷங்கர். இந்தக் காரணத்தை வைத்தே, ஜூன் மாதத்திற்கு பட வெளியீட்டைத் தள்ளி வைத்திருக்கிறார்கள்.

Tags :
Advertisement