இந்த ஆண்டுக்கான சிறந்த வனவிலங்கு புகைப்படம் எது தெரியுமா?
பனிப்பாறை மீது உறங்கும் துருவக் கரடி அழகாக உறங்கிய படத்தை எடுத்த பிரிட்டனைச் சேர்ந்த நிமா சரிஹானி (Nima Sarikhani) ' இந்தாண்டிற்கான சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞர்’ விருதை வென்றுள்ளார். லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Natural History Museum) நடத்திய புகைப்படப் போட்டியில் நார்வே தீவுகளில் உள்ள துருவக் கரடியை படமெடுத்த புகைப்படத்திற்கு ‘சிறந்த புகைப்பட கலைஞர்’ (மக்கள் தேர்வு) விருது அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்பட போட்டியில் சுமார் 95 நாடுகளில் இருந்து மொத்தமாக 50,000 பேர் பங்கேற்றனர். அவர்கள் வன உயிரினங்களின் புகைப்படங்களை எடுத்து அனுப்பி இருந்தனர். அதிலிருந்து சிறந்த 25 புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் நிமா எடுத்த, பனிப்பாறை மீது உறங்கும் துருவக் கரடியின் படம் சிறந்த படமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. துருவக் கரடியின் புகைப்படத்திற்கு 75,000 பேர் வாக்களித்துள்ளனர்.
இது குறித்து நிமா சரிஹானி கூறியதாவது:
"மூன்று நாட்களாக துருவக் கரடியின் வருகைக்காக காத்திருந்தேன். ஒரு நாள் வந்தது. இந்தாண்டிற்கான மக்கள் தேர்வு சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருது பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். நார்வேயின் ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்திற்கு வடக்குப் பகுதியில் எடுக்கப்பட்டது இந்தப் புகைப்படம். அதை காணும்போதே அவ்வளவு அழகாக இருந்தது.” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
” பனி அதிகம் இருக்கும் இடத்தை தேடி சென்றோம். அங்கு வயதில் இளைய மற்றும் மூத்த ஆண் துருவக் கரடிகளை பார்த்தோம். சுமார் எட்டு மணி நேரம் காத்திருந்தோம். ஒரு நள்ளிரவில் கரடி ஒன்று சிறிய பனிப்பாறையின் மீது ஏறி, தனது வலுவான பாதங்களைப் பயன்படுத்தி, தான் தூங்கும் இடத்தை தயார் செய்தது. நகங்களை பயன்படுத்தி அது பனியை செதுக்கியது அழகாக இருந்தது. பின்னர் தூங்கியது. அதை படமாக எடுத்தேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
Don’t miss your chance to vote for your #WPYPeoplesChoice winner! ⏰
There are some breathtaking scenes from around the world. ✨
Make sure you vote for your favourite image before 31 January: https://t.co/DMxNHKvB3U pic.twitter.com/cV2tJBGJmx
— Wildlife Photographer of the Year (@NHM_WPY) January 21, 2024