“வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? மக்கள் வயிறு எரிய வேண்டுமா?” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் 50 ரூபாய் விலை உயர்த்தப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று அறிவித்தார். அதன்படி, விலை உயர்வு அடிப்படையில் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல், உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டன் விலை உயர்வை கண்டித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? "உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்" என்பது, பாஜக அரசுக்கு மிகவும் பொருந்தும்!
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!? வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமைந்திருக்கிறது.
மக்களே அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பாஜக-வின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது! மத்திய பாஜக அரசே... தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.