கேக் தயாரிப்பில் ரசாயன பொருட்களை பயன்படுத்தக் கூடாது - கிருஸ்துமஸ் நெருங்குவதையொட்டி பேக்கரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதற்காக தயாரிக்கப்படும் கேக்கில் சேர்க்கப்படும் பொருட்களை தரமாக பயன்படுத்த பேக்கரி உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்காக தயாரித்து விற்கப்படும் கேக்குகள் தரமான முறையில் இருக்க வேண்டும் எனவும் கேக்கில் பயன்படுத்தக் கூடிய கிரீம்களில் (Cream) எந்த ஒரு ரசாயன பொருட்களும் கலந்து தயாரிக்க கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது
மேலும், கேக்கில் பயன்படுத்தக்கூடிய வண்ண நிறங்கள் உணவு பாதுகாப்பு விதிமுறையின் அளவுபடி இருக்க வேண்டும் என்றும் கேக்கில் கூடுதல் வண்ண நிறங்கள் சேர்த்து தயாரித்தால் கடும் நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது. கேக் ஒரு இனிப்பு வகை என்பதால் பூச்சிகள், எறும்புகள், ஈக்களின், தொல்லை இல்லாமல் பாதுகாப்பான இடத்திலும், முறையாக பராமரிக்கப்பட்டு சுத்தமான இடத்திலும் வைத்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு துறை விதிகளை மீறி கேக் பொருட்களை தயாரித்தால் சம்பந்தப்பட்ட பேக்கரி கடையின் உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின் படி எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டிகை நாட்கள் நெருங்கும் நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கரிகளுக்கு சென்று ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.