குழந்தைகள் தங்கள் சிறுவயதில் எதிர்கொள்ளும் மோசமான அனுபவங்கள், அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
சிறுவயதில் வீட்டில் நடக்கும் பிரச்சினைகளும், வெளியுலகில் சந்திக்கும் மோசமான அனுபவங்களும் குழந்தைகளின் மன நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அபாயம் உள்ளது என நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் நிறுவனம் தனது ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது. எந்த அளவுக்கு எதிர்மறையான விஷயங்களை இளம்வயதில் குழந்தைகள் பார்க்கிறார்களோ அல்லது அவர்களுக்கு ஏற்படுகிறதோ, அதே அளவுக்கு அவர்களின் மன ஆரோக்கியம் எதிர்காலத்தில் பாதிக்கக் கூடும் என தெரிவித்துள்ளனர்.
எடுத்துகாட்டாக சிறுவயதில் பாலியல் துன்புறுத்தல், புறக்கணிக்கப்படுதல், தனித்து விடப்படுதல், அன்பு காட்டப்படாமை, போதைப்பொருள்கள், வீட்டுக்குள்ளேயே பெற்றோர்களுக்கு இடையே ஏற்படும் சண்டை இதுபோன்ற மன அல்லது உடல்ரீதியான துன்புறுத்தல்கள் அவர்களுக்கு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி, நீண்டகால மன பிரச்னைக்கு உள்ளாக்கலாம். ஆதீத மன அழுத்தம், தனிமை, கோபம், ஈடுபாடின்மை, எப்போதும் பயத்தோடும் அல்லது பதற்றத்தோடும் இருப்பது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் லைடன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுகுறித்து கூறுவதாவது;
குழந்தைப்பருவத்தின் நாம் அனுபவிக்கும் மனரீதியான அல்லது உடல்ரீதியான எந்த துன்புறுத்தலாயினும் அது நம் மூளையை பாதிக்கும். ஏனெனில் நாம் அதிக அச்சமடையும் போது, மன அழுத்தத்திற்கு உள்ளாகும்போது, அவை மூளையின் கட்டமைப்பை பாதிக்கின்றன என தெரிவித்துள்ளனர்.
ஒரு பெண் குழந்தை சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருந்தால், அது அவளுக்கு அச்சத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி தன் வாழ்நாள் முழுவதும் ஒருவித பயத்தை கொடுக்கிறது. மேலும் எடுத்துக்காட்டாக கூற வேண்டுமெனில் சந்திரமுகி திரைப்படத்தில் நடிகை ஜோதிகாவின் பிரச்னைக்கு அவரின் சிறுவயதில் நடைபெற்ற சம்பவங்களே காரணமாக இருக்கும். மேலும் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘சைக்கோ’ படத்தில் கூட சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களாலேயே அவர் கொலையாளியாக மாறியிருப்பார்.
1963 ல் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்ஹாக் இயக்கத்தில் வெளிவந்த சைக்கோ திரைப்படமும் இந்த கருத்தை அடிப்படையாக வைத்தே எடுக்கப்பட்டிருக்கும்.