For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

DNA Review | ஹிட் அடித்ததா அதர்வாவின் 'டிஎன்ஏ'? படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம் இதோ!

அதர்வா நடிப்பில் வெளியான 'டிஎன்ஏ' படத்தின் திரைவிமர்சனத்தை இங்கு காணலாம்.
11:28 AM Jun 20, 2025 IST | Web Editor
அதர்வா நடிப்பில் வெளியான 'டிஎன்ஏ' படத்தின் திரைவிமர்சனத்தை இங்கு காணலாம்.
dna review   ஹிட் அடித்ததா அதர்வாவின்  டிஎன்ஏ   படம் எப்படி இருக்கு  திரைவிமர்சனம் இதோ
Advertisement

அதர்வாமுரளி, நிமிஷாசஜயன், பாலாஜிசக்திவேல் நடிப்பில் வெளியாகி உள்ள படம் டிஎன்ஏ. ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா போன்ற தரமான படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். அதர்வாவுக்கு இந்த படம் வெற்றியை கொடுத்ததா? குழந்தை கடத்தல், திரில்லர் கதையமைப்பில் உருவான டிஎன்ஏ ரசிக்க வைக்கிறதா?

Advertisement

காதல் தோல்வியால் குடிகாரனாக சுற்றும் அதர்வாவும், சற்றே மனநிலை பிரச்னை உடைய நிமிஷாசஜயனுக்கும் திருமணம் நடக்கிறது. பின்னர், அவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக மாறுகிறது. ஒரு குழந்தைக்கு தாய் ஆகிறார் நிமிஷா. ஆனால், மருத்துவமனை யில் வைத்து ‘இது என் குழந்தை இல்லை’ என கதறுகிறார். குழந்தை கடத்தப்பட்டதா? நிமிஷாசஜயன் மனநிலை பிரச்னையால் அப்படி சொல்கிறாரா? என்ற குழப்பநிலையில், மனைவியின் வார்த்தையை நம்பி குழந்தையை தேடுகிறார் அதர்வா? டிஎன்ஏ பரிசோதனையில் அது அவர்கள் குழந்தை இல்லை என்பது நிரூபணம் ஆகிறது.

அதர்வா தன் குழந்தைக்கு என்னாச்சு என்று போலீஸ் பாலாஜிசக்திவேலுடன் தீவிரமாக தேடி அலைகிறார். குழந்தை கடத்தல், அதை செய்யும் கும்பல், பணம் என இன்னொரு உலகம் அவர்களுக்கு தெரிகிறது. கடைசியில் தனது உண்மையான குழந்தையை அதர்வா மீட்டாரா? என்பதுதான் கதை. டாடா போன்ற படங்களை கொடுத்த ஒலிம்பியா மூவீஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. போதைக்கு அடிமையான அதர்வா செயல்பாடுகளில் இருந்து கதை தொடங்குகிறது. சற்றே மெதுவாக நகரும் கதை, நிமிஷா சஜயன் என்டரியில் இருந்து சூடுபிடிக்க தொடங்குகிறது. திருமணம் நடப்பது, குழந்தை காணாமல் போவது என அடுத்த கட்டத்துக்கு நகரும் கதை, அதர்வா குழந்தையை தேட ஆரம்பிக்க சூடுபிடித்து திருப்பங்களுடன் பறக்க ஆரம்பிக்கிறது.

அதர்வாவுக்கு இது வெற்றி படம் என்றே சொல்லலாம். அவரின் குடிகார சேட்டைகள், நிமிஷா மீதான பாசம், குழந்தையை தேடி அலைவது, வில்லன்களுடன் மோதல் சீன்கள் ரசிக்க வைக்கின்றன. ஆனாலும், அவரை பல சீ்ன்களில் தூக்கி சாப்பிட்டு, தன்னை தேர்ந்த நடிகையாக பல சீன்களின் காண்பிக்கிறார் நிமிஷா சஜயன். பெண்பார்க்கும் சீனில் ஆரம்பித்து, இது என் குழந்தை இல்லை என பதறுகிற சீன், தன் வசம் இருக்கிற குழந்தையிடம் பாசம் காட்டுகிற சீன், கிளைமாக்ஸ் என பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். குழந்தையை இழந்து தவிக்கும் ஒரு பாசக்கார அம்மாவாக வாழ்ந்து இருக்கிறார். குறிப்பாக, அவர் சம்பந்தப்பட்ட உணர்ச்சிபூர்வமான கிளைமாக்ஸ் சீன் கை தட்ட வைப்பதுடன், கண் கலங்க, உருக வைக்கிறது.

இவர்களை தவிர, போலீசாக வரும் பாலாஜிசக்திவேலின் இயல்பான நடிப்பு, வில்லனாக வரும் சுப்ரமணியசிவாவின் மாறுபட்ட ஆக்டிங், நர்ஸ் கேரக்டர், நண்பனாக வரும் ரமேஷ்திலக், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் செல்வராஜ், போஸ் வெங்கட், இன்னொரு குழந்தையின் அம்மாவாக வரும் ஐஸ்வர்யா, அந்த டாக்டர் நடிப்பும் மனதில் நிற்கிறது. டாஸ்மாக் பாடல், வில்லன் சுப்ரமணியசிவா சம்பந்தப்பட்ட கவர்ச்சி பாடல் படத்துக்கு வேகத்தடையாக உள்ளது.

இந்த மாதிரி கதையில் இப்படிப்பட்ட பாடல்கள் எந்த வகையிலும் பலன் இல்லை. சில காட்சிகள் மெதுவாக நகர்கிறது. ஒரு பெரிய குழந்தை கடத்தல் நெட் வொர்க்கை பிடிக்க நாலைந்து போலீஸ் மட்டும் தேடி அலைவது லாஜிக் மீறல்.
அதேசமயம், படத்தில் ஆங்காங்கே வரும் சின்ன, சின்ன பாடல்கள், கிளைமாக்ஸில் நடக்கும் அந்த புதுச்சேரி சிவன் கோயில் சீன்கள், இயல்பான தத்துவ வசனங்கள், குழந்தை கடத்தல் நெட் வொர்க் காட்சிகள் படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம் நிமிஷா சஜயன் நடிப்பு,
வலுவான திரைக்கதை, அடுத்தடுத்து வரும் டுவிஸ்ட், புது கேரக்டர்களின் என்ட்ரி, எழுத்தாளர் அதிஷா ரைட்டிங், கிளைமாக்ஸ். ஒரு பாட்டி கேரக்டர் வருகிறது. அடடா, அவரை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. ஒரு குழந்தை கடத்தல் கதை என்றாலும், இன்றைய சூழ்நிலையில் குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதிகளின் மனநிலை, குறிப்பாக, குழந்தைக்காக ஏங்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.

குழந்தை இன்மையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நவீன சிகிச்சை முறை, அப்படி புதிதாக முளைத்துள்ள மருத்துவமனை, ஏமாற்று பேர்வழிகள், புரோக்கர்கள் ஆகிய விஷயங்களையும் விழிப்புணர்வாக கமர்ஷியல் படத்தில் காண்பித்து இருப்பது பாராட்ட தக்கது. கணவன், மனைவி பாசமும் செம. இந்த படத்தை பார்த்து இளம் தம்பதிகள், குழந்தை இன்மை பிரச்னையில் தவிப்பவர்கள், குழந்தைக்காக மருத்துவமனையில் பணத்தை கொட்டுபவர்கள், அவர்களை ஏமாற்றுபவர்கள் மனம் மாறினால் அதுவே பெரிய சாதனை.

குழந்தை சம்பந்தப்பட்ட எத்தனையோ கதைகள் தமிழில் வந்து இருந்தாலும் டிஎன்ஏ அதில் தனித்து நிற்கிறது. அதர்வா, நிமிஷா நடிப்பு, இயக்குனர் வெங்கடேசனின் சமூக பார்வை, விறுவிறு திரைக்கதை, அவ்வப்போது அறிமுகமாகும் புது கேரக்டர்கள், திருப்பங்கள், குறிப்பாக, அந்த உணர்வுபூர்வமாக கிளைமாக்சால் படம் வெற்றி நடை போடுகிறது.

- மீனாட்சி சுந்தரம், சிறப்பு செய்தியாளர்

Tags :
Advertisement