தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி!
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.
அண்மை காலமாக வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அந்த நேரங்களில் மட்டும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. நுரையீரல் நிபுணர்கள் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்தனர்.
இதையும் படியுங்கள்: ஆரோக்கியத்திற்கான IV ட்ரிப்ஸ் – அதிகரிக்கத் தொடங்கும் புதிய கலாச்சாரம்..!
இந்நிலையில், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து கடந்த டிச.12-ம் தேதி தான் விஜயகாந்த் வீடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். இந்த நிலையில் அவர் மீண்டும் நேற்று மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் டிச.28-ம் தேதி வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.