திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் கடந்த 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக மழை நீர் பல்வேறு பகுதியில் தேங்கி நின்றதால் மக்கள் பெறும் அவதிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதேபோல திருவண்ணாமலை, கடலூர் மற்றும் தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட நிவாரண பணிகளை வழங்கினார்.
இதயடுய்த்து ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி விடுவிக்க பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உடனடியாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும் எனவும், இதுவரை கண்டிராத அளவில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களை ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்னையிலிருந்து திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளான விழுப்புரம், கடலூர், தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு 1 லட்சம் கிலோ அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திலிருந்து கொடியசைத்து அனுப்பிவைத்தார்.