Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"திமுகவின் திட்டங்களை வாட்ஸ்அப் மூலம் வாக்காளர்களிடம் சேர்க்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின் கடிதம்!

திமுக அரசின் திட்டங்களையும், பயன்களையும் வாட்ஸ்அப் குழுக்கள் வாயிலாக வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12:35 PM May 06, 2025 IST | Web Editor
திமுக அரசின் திட்டங்களையும், பயன்களையும் வாட்ஸ்அப் குழுக்கள் வாயிலாக வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,

Advertisement

நம் உயிருடன் கலந்திருக்கும் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ எனப் பதவியேற்பு உறுதிமொழி ஏற்று, இந்த மே மாதம் 7-ஆம் நாளுடன் நான்காண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது திமுக அரசு. நம்பிக்கை வைத்து ஆட்சியை ஒப்படைத்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான திட்டங்களை வழங்கிடும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம்.

2021-ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிச்சான்றிதழை நம் உயிர்நிகர் கருணாநிதி தன் அண்ணன் அருகே நிரந்தர ஓய்வெடுக்கும் இடத்தில் காணிக்கையாக்கிவிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, வாக்களிக்காத மக்களும் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே! என்று நினைக்கக்கூடிய அளவிலான ஆட்சியை வழங்கிடுவோம்” என்று அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றும் வகையில் திமுக அரசு, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலட்சியத்துடனான அனைவருக்குமான அரசாகத் திகழ்கிறது.

இந்தியாவின் பிற மாநிலங்களும் - கொள்கைரீதியாக நமக்கு என்றும் எதிரானவர்கள் ஆள்கின்ற மாநிலங்களும்கூட திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் பின்பற்றும் வகையில் முன்னோடியான அரசாக முதன்மையான அரசாகத் தமிழ்நாட்டை இந்த நான்காண்டுகளில் உயர்த்தியிருக்கிறோம். நலன் தரும் திட்டங்கள் நாடு போற்றும் சாதனைகளுடன் ஐந்தாவது ஆண்டில் திமுக அரசு பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளும் இந்த நல்லாட்சி தொடரும் என்பதைத் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை காட்டுகிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் மக்களுக்காகப் பணியாற்றுகிற இயக்கம். தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பேரறிஞர் அண்ணா தலைமையில் நெசவாளர்களின் துயர் துடைத்த இயக்கம் இது. கருணாநிதி தலைமையில் புயல், வெள்ள நிவாரண உதவிகளைச் செய்தது நம் கழகம். உங்களில் ஒருவனான என் தலைமையில் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, கொரோனா பேரிடர் காலத்தில், ‘ஒன்றிணைவோம் வா’ என உடன்பிறப்புகள் ஒருங்கிணைந்து மக்களுக்கு உதவிகள் செய்தோம். 6 முறை ஆட்சி செய்யக் கிடைத்த வாய்ப்புகளில் தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்து, ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறும் வகையிலான திட்டங்களை நிறைவேற்றி, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்தது அரசு. ஏழாவது முறையாக 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போவதும் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்திடக் களத்தில் கடுமையாக உழைத்திட வேண்டும். அரசியல் எதிரிகளால் நமது ஆட்சியைக் குறை சொல்ல முடியாத காரணத்தால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள். ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள். அதிகார அமைப்புகளை ஏவி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இந்தப் பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு அடிமைக் கட்சியல்ல, நம் திமுக இது சுயமரியாதை இயக்கம். தன்மானமும் தைரியமும் கொண்ட இயக்கம். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கும் இயக்கம். இந்தியாவுக்கு வழிகாட்டும் இயக்கம்.

மே 3 ஆம் நாள் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ‘‘நாடு போற்றும் நான்காண்டு - தொடரட்டும் பல்லாண்டு’ என்ற தலைப்பில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை 868 ஒன்றியங்கள், 224 பகுதிகள், 152 நகரங்கள் என 1244 இடங்களில் 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 கழகப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்தப் பேச்சாளர்களுக்குக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி., இன்று மாலை ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குகிறார். சொல்லித் தீராத அளவுக்குச் சாதனைகள் நிறைந்திருப்பதால்தான் இத்தனை இடங்களில் பெருமிதத்துடன் நம்மால் பொதுக்கூட்டங்களை நடத்திட முடிகிறது.

2021 சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத சாதனைத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்குப் பயனளித்து வருகின்றன. இன்னும் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளும் இருப்பதை நான் மறக்கவுமில்லை, மறுக்கவுமில்லை. அவற்றையும் நிறைவேற்றிட வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கிறேன். அதற்கு உடன்பிறப்புகளான நீங்கள் அனைவரும், உங்களில் ஒருவனான எனக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.

இனி ஓராண்டு காலம் நமக்குத் தேர்தல் பணிகளே முதன்மையானதாக இருக்கும். அதற்கான செயல்திட்டங்கள் என் தலைமையில் தலைமைக் கழகத்தால் வகுக்கப்பட்டு, மாவட்டக் கழகச் செயலாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நம் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும். கழகத்தின் பவள விழாப் பொதுக்குழு ஜூன் 1-ஆம் நாள் கூடல் மாநகராம் மதுரையில் நடைபெறவிருப்பதைக் கழகப் பொதுச்செயலாளர் அறிவித்திருக்கிறார். அதில், தேர்தல் பணிகள் குறித்து இன்னும் விரிவான செயல்திட்டங்கள் முன்வைக்கப்படும்.

அதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் 1,244 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் சொற்பொழிவாளர்கள் நான்காண்டு கால திமுக அரசின் ஆட்சியின் சாதனைகளையும்; அதனால் மக்கள் பெற்றுள்ள பயன்களையும் ஒவ்வொரு இடத்திலும் எடுத்துரைக்க வேண்டும். இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்ற முத்திரைத் திட்டங்களால் மக்கள் பெற்றுள்ள நன்மைகளைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைப்பது அவசியமாகும். நீண்ட நேரம் உரையாற்ற வேண்டிய கட்டாயமில்லை. எளிமையாக, இனிமையாக, சுருக்கமாக கேட்பவரைக் கவர்கின்ற வகையில் எடுத்துரைத்தாலே திமுக அரசின் திட்டத்தால் பயன் பெற்றுள்ள தமிழ்நாட்டு மக்கள் அதனைப் புரிந்துகொள்வார்கள்.

கழகப் பேச்சாளர்கள் அவரவருக்குரிய பாணியில் நல்ல முறையில் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். நம்மை எதிர்ப்பவர்கள் தங்கள் மேடைகளில் பொய்யாக, மோசமாக, ஆபாச, அருவருப்பாகப் பேசினாலும், நமது பேச்சாளர்கள் கண்ணியக்குறைவான சொற்களைப் பயன்படுத்திடக் கூடாது என்பதை அறிவுறுத்தலாகவும் கட்டளையாகவும் தெரிவிக்கிறேன். ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் சொன்னதைச் செய்தது மட்டுமின்றி, சொல்லாததையும் செய்து காட்டியிருக்கிறோம். அவற்றை எடுத்துச் சொன்னாலே போதும். குறைகுடங்கள் கூத்தாடுவது போல, நிறைகுடமான நாம் இருந்திட வேண்டியதில்லை.

பல வேலைச் சூழல்களுக்கிடையதான் பொதுக்கூட்டங்களில் பேசப்படுவதைப் பொதுமக்கள் உற்று கவனிக்கிறார்கள். அவர்களின் மனதில் பதியக்கூடிய வகையில், நிமிட நேரத்தில் செய்தியின் சாரத்தைச் சொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர்களாக நம் சொற்பொழிவாளர்கள் இருந்திடுவது அவசியம். பொதுக்கூட்டங்களுக்குக் கழகத்தின் பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும் கட்டாயம் வருகின்ற வரையில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதிக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவர்கள்தான் சொற்பொழிவாளர்களின் கருத்துகளை ஒவ்வொரு வாக்காளரிடமும் கொண்டு சேர்க்கக் கூடியவர்கள்.

பொதுக்கூட்டங்கள் என்பவை தேர்தல் களத்திற்கு உத்வேகம் தரக்கூடியவை. அத்துடன், இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்புகின்ற, அவர்களின் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகவே ஆகிவிட்ட சமூக வலைத்தளங்களிலும் பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும், கழகத்தின் மற்ற நிர்வாகிகளும் முனைப்புடன் செயல்பட வேண்டும். கழக நிர்வாகிகளையும் வாக்காளர்களையும் இணைக்கக்கூடிய வாட்ஸ்அப் குழுக்களில் ஒவ்வொருவரும் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும். தலைமைக் கழகம் சார்பிலும், கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பிலும் மற்ற அணிகளை ஒருங்கிணைத்தும் அனுப்பப்படும் செய்திகளை அவரவர் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர வேண்டும். கழக அரசின் சாதனைகளும் அதன் பயன்களும் ஒவ்வொரு வாக்காளரிடமும் போய்ச் சேர வேண்டும்.

ஒரு மணி நேரப் பேச்சைவிட, ஒரு நிமிட, அரை நிமிடக் காணொலிகள், ரீல்ஸ்கள் தான் லட்சக்கணக்கானவர்களிடம் உடனடியாகப் போய்ச் சேர்கின்றன. கருணாநிதி நூற்றாண்டையொட்டி தலைமைக் கழகத்தால் வழங்கப்பட்ட பொறுப்பினை ஏற்று, கழக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதிலிருந்து தேர்வு பெற்றுள்ள இளம்பேச்சாளர்கள் பலருடைய உரைகளை ஒரு நிமிடக் காணொலியாகப் பார்க்கிறேன். அவர்களின் ஆர்வத்தை, உத்வேகத்தை, கொள்கையுணர்வைக் கண்டு மகிழ்கிறேன். கழக நிர்வாகிகளும், பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும் இத்தகைய உரைகளைக் கேட்டு அவற்றைப் பகிர்வதுடன், அவரவர் பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ள திமுக அரசின் திட்டங்களையும், அதனால் மக்கள் பெற்றுள்ள பயன்களையும் சமூக வலைத்தளங்கள், வாட்ஸ்அப் குழுக்கள் வாயிலாக வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் திமுகவை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள். அவர்களின் மனக்கணக்கு தப்புக்கணக்காகவே முடியும் என்பதைச் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் போடுகிற கணக்கு தீர்மானிக்கும். நாம் மக்களிடம் செல்வோம். அவர்களுக்காகக் கழக அரசு செய்ததைச் சொல்வோம். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவற்றை எடுத்துரைப்போம். கழக சொற்பொழிவாளர்களின் கருத்துகளை உள்வாங்கி, கழக அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று முழங்கிடுவோம்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags :
DMKLetterMK StalinVoterswhatsapp
Advertisement
Next Article