கனடாவிலும் இனி பள்ளிகளில் காலை உணவு...எல்லை கடந்து விரிவடையும் திமுகவின் திட்டம்...தமிழ்நாடு அரசு பெருமிதம்...
'இந்தியாவில் மட்டுமில்லாமல் கனடாவிலும் காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலை நோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றியாகும்' என திமுக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல, கனடாவிலும் காலை உணவுத் திட்டம் நடைமுறைப்பட்டது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமாக தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெகுசிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் 7.5.2022 அன்று விதி 110-ன் கீழ்,
“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை சிற்றுண்டி வழங்கப்படும். நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும், பள்ளிக்குச் செல்லக் கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்குக் கிடைத்திருக்கிறது என்றும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம், படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.” என்றும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான 15.9.2022 அன்று முதலமைச்சர், இத்திட்டத்தினை மதுரையில் தொடங்கி வைத்தார்கள். மேலும், 25.8.2023 அன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த திருக்குவளை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி, காலை உணவுத் திட்டத்தினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தினார். அதன் மூலம் 31,000 அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் நாள்தோறும் காலை உணவு உண்டு வகுப்பறைகளில் சிறப்பாகக் கல்வி பயின்று வருகிறார்கள்.
இத்திட்டத்தின் சிறப்புகளை, தெலங்கானா மாநில அரசு அறிந்து அதன் அலுவலர்கள் தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்து காலை உணவு தயாரிக்கப்படும் இடம், பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்படுதல், பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடுதல் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துகிறது. தெலங்கானா மாநிலத்திலும் இந்தக் காலை உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிச் சென்றனர். அவ்வாறே, தெலங்கானா மாநிலத்தில் தற்போது காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
As a teacher, I know kids learn better on a full stomach. Our new National School Food Program will make sure kids aren’t going to school hungry – and will give every student a fair shot at doing their best in the classroom.
— Justin Trudeau (@JustinTrudeau) April 1, 2024
இந்தக் காலை உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் புகழடைந்து வருகின்ற நிலையில், இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கனடா நாட்டில் அதன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் இன்று (2.4.2024) “கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும்”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.