"திமுகவின் தேர்தல் அறிக்கை தேர்தலின் கதாநாயகியாகக் கூட இருக்கலாம்" - கனிமொழி எம்பி பேட்டி
"திமுகவின் தேர்தல் அறிக்கை தேர்தலுக்கான கதாநாயகனாக மட்டுமல்ல கதாநாயகியாகக் கூட இருக்கலாம்" என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மக்களவையின் பதவிக் காலம் வரும் மே 21-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால், மக்களவைக்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. மக்களவைத் தேர்தல் தேதிகள் தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்நிலையில், கட்சியின் கூட்டணிகள் குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து இன்று திமுகவின் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கூட்டம் கூடியது. இக்கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
“ வரக் கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்கள், தொழிலாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்க உள்ளோம். பல்வேறு சமூக அமைப்புகளின் கருத்துக்களை பெறும் வகையில் இம்முறையும் ஆலோசனை வழங்க மின்னஞ்சல் மற்றும் தொலை பேசி எண்ணும் விரைவில் வெளியிடப்படும்.
எந்தெட்ட இடங்களுக்கு செல்கிறோம் என்பது தொடர்பான பட்டியல் தயாரித்துள்ளோம். முதல்வரிடம் ஒப்புதலுக்காக வைத்துள்ளோம் . எப்போதும் போல இம்முறையும் திமுக தேர்தல் அறிக்கை முக்கிய பங்காக இருக்கும் “ என தெரிவித்தார்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர் திமுகவின் தேர்தல் அறிக்கை தேர்தலுக்கான கதாநாயகனாக இருக்குமா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கனிமொழி எம்பி “கதாநாயகியாகக் கூட இருக்கலாம் “ என தெரிவித்தார்.