“திமுகவின் முறைகேடுகளை விமர்சனம் செய்யலாம், ஆனால் தலைவர்களை விமர்சனம் செய்யக்கூடாது” - தவெக தலைமை பேச்சாளர்!
திமுக கட்சியின் கொள்கைகளையும், முறைகேடுகளையும் விமர்சனம் செய்யலாம் எனவும், ஆனால் திமுக தலைவர்களையோ, நிர்வாகிகளையோ விமர்சனம் செய்யக்கூடாது என தவெக தலைமை கழக பேச்சாளர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தவெக உறுப்பினர்கள் சேர்க்கை திருவிழா நிகழ்வு நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மற்றும் கட்சியின் உறுதிமொழியுடன் தொடங்கியது. இதில் கட்சியின் தலைமை பேச்சாளர் பேராசிரியர் சம்பத்குமார், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சாமுவேல்ராஜ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதில் திருச்செந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட திமுக, அதிமுக, விசிக, நாதக உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர். அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சாமுவேல்ராஜ் கட்சியின் துண்டை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சில் பேசிய கட்சியின் தலைமை பேச்சாளர் பேராசிரியர் சம்பத்குமார், தமிழக வெற்றிக்கழகம் மாநாடு நடைபெற்ற நாள் முதல் தமிழக அரசியலின் பேசுபொருளாக இருந்து வருவதாகவும் தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சிதான் நடைபெறும் என்றார். மேலும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைமையில் கூட்டணி அமைத்து தலைவர் விஜய்யை முதலமைச்சராக அரியணை ஏற்றிட உழைத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் திமுவின் கட்சியையும் அதன் கொள்கைகள், முறைகேடுகளை விமர்சனம் செய்யுங்கள், ஆனால் கட்சியின் தலைவர்களையோ, நிர்வாகிகளையோ விமர்சனம் செய்யக்கூடாது என தெரிவித்தார்.