“இடைத்தேர்தலில் திமுக பெற்றது போலி வெற்றி” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
இந்த அரசாங்கம் மக்களுடைய பிரச்சினைகளை கூர்ந்து கவனித்து செயல்படுத்த வேண்டும். சேலம் மாவட்டத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு திட்டத்தையாவது கொண்டு வந்தார்களா?. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியின் போது போடப்பட்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்களா?.
அரசு சார்ந்த துறைகளில் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. எந்த இடத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டுமோ, அந்த இடத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக பெற்றது போலி வெற்றியாகும். களத்தில் யாரும் போட்டியிடாத நிலையில் திமுக வெற்றி பெற்றது.
2026ம் ஆண்டு நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் பலமான கூட்டணி அமையும். இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை. டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி, இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியா கூட்டணிக்கு சம்மட்டி அடி விழுந்துள்ளது என்றே கூறலாம். டெல்லி மக்கள் பாஜகவை விரும்புகின்றனா். அதனால் அக்கட்சி வென்றது.
வேலூரில் ரயிலில் பயணித்த கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரது வயிற்றியில் இருந்த சிசு உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என்பது அதிகாித்து வருகிறது. எனவே தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீராக இல்லை.
திருநெல்வேலிக்கு சென்று அல்வா சாப்பிட்ட முதல் அமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அனைவருக்கும் அல்வா கொடுத்து உள்ளார்" என கூறினார்.