“அறியாமையில் இருக்கும் சிலரின் கூற்றுக்கு 200 அல்ல 234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்” - அமைச்சர் சேகர்பாபு!
“அறியாமையில் இருக்கும் சிலர் கூற்றுக்கு நிச்சயம் 2026ஆம் ஆண்டு 200 தொகுதி இல்லை, 234 தொகுதிகளையும் திராவிட முன்னேற்ற கழகம் கைப்பற்றும்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் ஜிகேஎம் காலனியில் உள்ள பட்டுவெடு நாடார் திருமண மண்டபத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை ஒட்டி, அறநிலையத்துறை அமைச்சர் பிகே.சேகர் பாபு, தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் ஆகியோர் 10 கருணை இல்லங்களுக்கு தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கான வண்டி, மளிகை பொருட்கள், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, போர்வைகள், வாலி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது;
“திமுக அரசு பெண்களுக்காக ஏற்படுத்திய திட்டங்கள் இந்தியா மட்டுமின்றி, உலகத்திற்கு வழிகாட்டும் திட்டங்களாக உள்ளது. புதுமை பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் என எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அடுக்கடுக்கான திட்டங்களை ஆட்சியில் அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரை பார்த்து திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்ற கூட்டம் ஒன்று உள்ளது.
நீதி தேவதையின் ஆட்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி. தமிழ்நாட்டின் அரசியல் தெரியாமல் அறியாமையில் சிலர் கருத்து கூறி வருகின்றனர். அறியாமையில் இருக்கும் சிலர் கூற்றுக்கு நிச்சயம் 2026ஆம் ஆண்டு 200 தொகுதி இல்லை, 234 தொகுதிகளையும் திராவிட முன்னேற்ற கழகம் கைப்பற்றும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தண்டனைப் பெற்றுத் தரக்கூடிய ஆட்சி. இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்களின் நிலைப்பாடு. இதில் குறைவு ஏற்படும் என்று நினைப்பவர்களின் கனவு பகல் கனவாகவே முடியும்” என தெரிவித்தார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், “உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்துவரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026-ல், மக்களே மைனஸாக்கி விடுவார்கள்” என்று திமுகவை சாடி பேசினார். இதற்கு பதலளிக்கும் விதமாக விஜய்யை சாடி அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.