"2026ம் ஆண்டு தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெல்லும்" - ஆர்.எஸ்.பாரதி உறுதி!
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் திமுக சட்டத்துறையின் மூன்றாம் மாநில மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் 50 அடி உயர கம்பத்தில் திமுக கொடி ஏற்றி தொடங்கி வைத்தார். மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி எம்.பி., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியபோது,
"திமுக சட்டத்துறை மிக வலுவான, போற்றுதலுக்குரிய ஒரு அணி. நம் நினைவில் வாழும் கருணாநிதியும், நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அடிக்கடி நம்மை பாராட்டக் காரணம், இந்தத் துறை மூலம் கட்சிக்கு பல்வேறு பெருமைகளை சேர்த்து இருக்கிறோம். முதலாவது மாநில மாநாட்டினை மதுரையில் 2016 ஜனவரி 24ஆம் தேதி கூட்டினோம்.
இரண்டாவது மாநில மாநாடு ஜனவரி 10ம் தேதி 2020ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. இரண்டு மாநாட்டை மிஞ்சும் வகையில் 3வது மாநாடு நடைபெறுகிறது. திமுக சட்டத்துறை மாநாடு நடத்தினால் அடுத்து நடக்கக்கூடிய தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். அது கடந்த கால வரலாறு, இது ஒரு சென்டிமென்ட்மான விஷயம். 2026-ம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெல்லப் போவது உறுதி" என்று கூறினார்.