“அமித்ஷாவின் உருட்டல், மிரட்டலுக்கு திமுக பயப்படாது” - அமைச்சர் சேகர்பாபு!
சென்னை அம்பத்தூர் அடுத்த கொரட்டூரில் இருவேறு பகுதியில் ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுத கரங்கள் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்குப் பகுதி செயலாளர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு
அழைப்பாளராக கலந்து கொண்ட அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பொது மக்களுக்கு உணவு வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, “பாஜக என்பது பியூஸ் போன பல்பு. அது ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்கும். அதை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஊழலை மறைக்க தான் திமுக ஹிந்தி மொழித் திணிப்பை எதிர்ப்பதாக அமித்ஷா கூறுவது ஏற்புடையது அல்ல.
அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை என அனைத்து ஏஜென்சிகளையும் வைத்து பாஜக தமிழகத்தில் சுற்றித் திரிகிறது. ஆனாலும் எந்த ஊழலை அவர்கள் கண்டுபிடித்தார்கள். நீதிமன்றமே அமலாக்க துறையின் இந்த செயலை கண்டித்து உள்ளது. திமுகவை மிரட்டி பார்க்கும் நோக்கத்தோடு அமித்ஷா இதை செய்கிறார்.
ஆனால் நமது முதலமைச்சர் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உயிரே போனாலும் துணிந்து நிற்பேன் என தெரிவித்துள்ளார். ஆகவே இந்த உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் பயப்படக்கூடிய கட்சி திராவிட முன்னேற்ற கழகம் அல்ல” என்று தெரிவித்தார்.