திமுக vs தவெக என்ற விஜய் - “மிக மதிப்பீடு நல்லதல்ல” என சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. பேட்டி!
விசிக எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “அரசியல் சாசனம் வலியுறுத்துகின்ற பன்மை தன்மைக்கு எதிரான ஒரு மாபெரும் தாக்குதலை பாஜக அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. இதை கருத்தியல் ஆழத்தோடு வலிமையாக தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. திமுக அரசு தொடர்ந்து சமூக நீதி, பன்மை தன்மை, அரசியல் சாசனத்தின் விழுமியங்களை பாதுகாப்பதை அடிப்படையாக கொண்டு களமாடுகிறது.
எனவே தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் பயணித்து வருகிறோம். சனாதத்தோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் அல்லது கமுக்கமாகவும் தொடர்பு கொண்டு
இருப்பவர்கள் தான் இன்று விடுதலைச் சிறுத்தைகளை விமர்சிக்கிறார்கள். இந்த
விமர்சனத்தை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.
நண்பர் விஜய் ஒரு புதிய அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார் அவர்
மக்களை சந்திக்கட்டும் மக்கள் எதிர்கொண்டு இருக்கின்ற பல்வேறு பிரச்சனைகளை அவர் கருத்தில் கொண்டு அவற்றுக்கு முகம் கொடுத்து களத்தில் நின்று போராட முன் வர வேண்டும். அதை விட்டுவிட்டு விசிக-வுக்கு அரசியல் வகுப்பு எடுத்தது நல்ல போக்கல்ல, அது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கும்.
அவருக்கும் சேர்த்து இதை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இன்று தமிழ்நாட்டில்
இருக்கிற முதன்மை முரண்பாடு முதன்மை நெருக்கடி நாம் எதிர்கொண்டு இருக்கின்ற மிகப்பெரிய நெருக்கடி என்பது சனாதன கருத்துக்களை கொண்டு இருக்கின்ற மதமாத போக்கை வெளிப்படுத்துகிற பாஜக அரசுதான். தொடர்ந்து சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும் தமிழ்நாடு நீண்ட நெடிய நாளாக பாதுகாத்து வருகின்ற சமூக நீதி கோட்பாடுகளுக்கு எதிராகவும் பாஜக படையெடுப்பு நடத்துகிறது.
பொருளாதாரப் புறக்கணிப்பு என்பதை தாண்டி இந்த மண்ணில் தொடர்ந்து மதத்தின் அடிப்படையிலான வன்முறையை தூண்டுகிறது. நீண்ட நெடிய காலமாக அனைத்து சமூக மக்களின் ஒரு நல்லிணக்கத்தின் அடையாளமாக
இருந்த மதுரைக்கு அருகாமையில் இருக்கின்ற திருப்பரங்குன்றம் இன்று மத
கலவரத்திற்கான அடையாளமாக மாற்றப்படுகிற முயற்சி சங்பரிவார் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விடுதலை சிறுத்தை கட்சி என்பது சமூக மாற்றத்திற்காக ஏற்பட்ட இயக்கம்
எங்கள் மீது தொடர்ந்து ஏவப்பட்ட பல்வேறு நெருக்கடியின் விளைவாக தவிர்க்க
முடியாத சூழலில் நாங்கள் தேர்தல் அரசியலுக்கு வந்தோம். எங்கள் நோக்கம் என்பது இந்த மண்ணிலே சாதியை ஒழித்து சமூக வாழ்க்கை முறை எல்லா நிலைகளும் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். இந்த நோக்கத்திற்கான வரலாற்று தேவை இருக்கிற வரை விடுதலை சிறுத்தைகள் இந்த மண்ணில் செல்வாக்கோடு செயல்படும்.
2026 தேர்தல் திமுக-விற்கும் தவெக-விற்கும் இடையேதான் போட்டி என்ற விஜய் சொல்வது என்பது தேர்தல் களத்தில் முதல் அடியை கூட எடுத்து வைக்காத ஒரு கட்சி அவ்வாறு மிக மதிப்பீடு செய்து கொள்வது நல்லதல்ல. விடுதலை சிறுத்தைகள் படிபடியே நகர்ந்தாலும் கூட மிக உறுதியாக நகர்ந்து
கொண்டிருக்கிறோம் 30 ஆண்டுகளுக்கு முன்னால் எங்களோடு சேர்ந்து உருவாக்கப்பட்ட பல அரசியல் கட்சிகளில் இன்று சில கட்சிகள் காணாமல் போய் இருக்கிறது. சில கட்சிகள் பல நெருக்கடிகளில் இருக்கிறது. மெதுவாக நாங்கள் முன்னேறினாலும் அங்கலமங்கலமாக முன்னேறினாலும் அழுத்தமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றோம்.
தமிழக வெற்றி கழகம் என்பது விடுதலை சிறுத்தைகளுக்கு ஒரு போட்டி அமைப்பல்ல. பாரதிய ஜனதா கட்சியும் அதோடு உடன் பட்டிருக்கின்ற அரசியல் இயக்கங்களும்தான் போட்டி. ஆன்மீக அமைப்புகளை மதவாத அமைப்புகளாக மாற்றிக் கொண்டிருக்கின்ற பாஜகவால் தான் இன்று தமிழ்நாட்டில் பல்வேறு விதமான சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதை திமுக அரசுக்கு எதிராக அவர்கள் திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். அது பலன் தராது.
வாரிசு அரசியல் பற்றி சிலர் எங்கே வேடிக்கையாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்
2000 ஆண்டுகளுக்கு மேலாக பிறப்பின் அடிப்படையில் மதவாத அதிகாரத்தையும் அரசியல் அதிகாரத்தையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கின்ற கருத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்பு திமுக. அதில்
தலைவராக யார் பொறுப்பேற்றுக் கொண்டாலும் அவர் அந்த கட்சிக்கான ஜனநாயக முனையின் அடிப்படையில் தான் வருகிறார்கள்”
இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் தெரிவித்துள்ளார்.