திமுக - விசிக தொகுதி பங்கீட்டில் இழுபறி?
திமுக-விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற இருந்த நிலையில் திடீரென நடைபெறவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திமுக - மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, திமுக - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற இருந்தது. இதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்டிருந்த திமுக குழுவினர் அறிவாலயத்தில் காத்திருந்ததாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் அக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. 2 தனித் தொகுதி மற்றும் ஒரு பொதுத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என விசிக வலியுறுத்தி வருகிறது. திமுக தரப்பில் 2 தனி தொகுதி மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற வில்லை என சொல்லப்படுகிறது.