திமுக முப்பெரும் விழா - ‘பத்மஸ்ரீ’ வென்ற பாப்பம்மாளுக்கு 'பெரியார் விருது'!
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியான பாப்பம்மாளுக்கு திமுக முப்பெரும் விழாவில் 'பெரியார் விருது' வழங்கப்படவுள்ளது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் செப்.17ஆம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த விழாவில் விருது பெருபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோவையைச் சேர்ந்த பாப்பம்மாள் பாட்டிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மளிகை கடையில் இருந்து ஹோட்டல், ஹோட்டலிலிருந்து விவசாயம் என விவசாயத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர்தான் இந்த பாட்டியம்மாள் பாட்டி(108).
சிறுவயது முதலே விவசாயத்தில் ஆர்வம் கொண்டிருந்தாலும், அதனை முறையாக கற்க தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் விவாதக் குழு அமைப்பாளராக இருந்தது தனிக்கதை. விவசாயம் மட்டுமின்றி அரசியலிலும் கால்பதித்துள்ளார் பாப்பம்மாள் பாட்டி. 1959ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகவும், 1964ஆம் ஆண்டு யூனியன் கவுன்சிலராகவும், மாதர் சங்கத் தலைவியாகவும் பல பதவிகளை வகித்துள்ளார் இந்த பாப்பம்மாள்.
இவ்வளவு சாதனைக்கும் சொந்தக்காரரான இவருக்குதான், கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது திமுக பெரியார் விருதை அறிவித்துள்ளது. அதுபோல அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கு அண்ணா விருதும், ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருதும், தமிழ்தாசனுக்கு பாவேந்தர் விருதும், வி.பி.இராஜனுக்கு பேராசிரியர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.