“முறையான அனுமதி பெற்றே பேனர் வைக்கப்படும் என திமுக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” - உயர்நீதிமன்றம் உத்தரவு!
முறையான அனுமதி பெற்றே பேனர்கள் வைக்கப்படும் என அனைத்துக் கட்சிகளும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் முன்னாள் எம்எல்ஏ இல்லத் திருமணத்திற்கு அமைச்சர் பொன்முடியை வரவேற்று திமுகவினர் பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மின்கம்பியில் கொடிக்கம்பம் உரசியதில் 12 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி பலியானார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு விழுப்புரத்தில் சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரியும், பலியான சிறுவனுக்கு உரிய இழப்பீட்டை வழங்க கோரியும் விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். “இதை ஒரு பாடமாக எடுத்து கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட
அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே பேனர்கள் வைக்கப்படும் என அனைத்து அரசியல் கட்சிகளும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், முதலாவதாக திமுக தரப்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய
வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூலை 29ஆம் தேதிக்கு
தள்ளிவைத்தனர்.