மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு தர வேண்டிய நிதியை கடந்த சில மாதங்களாக மத்திய அரசு விடுவிக்காமல் இருந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி நிதி வழங்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் இன்று (மார்ச் 290) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 850 திமுக ஒன்றியங்களில் 1170 இடங்களில் 100 நாள் வேலைக்குச் செல்வோரை திரட்டி இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை வழங்காததை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியதாவது,
"இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, ரத்த ஓட்டமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது பாஜக அரசு. உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக்கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா?" என்று பதிவிட்டிருந்தார்.