2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் திமுக - தேர்தல் “ஒருங்கிணைப்புக் குழு” அமைப்பு!
2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக சார்பில் ஒருங்கிணைப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டன. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றன.
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக சார்பில் ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு#TamilNadu | #AssemblyElection | #DMK | #MKStalin | #CMOTamilnadu | #News7Tamil | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/GrBbipzh5Y
— News7 Tamil (@news7tamil) July 20, 2024
இந்நிலையில், 2026-ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது. அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் அமைப்பு ரீதியான சீரமைப்புகளை திமுக தலைவருக்கும், கட்சியின் தலைமைக்கு பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் அடங்கிய “ஒருங்கிணைப்புக்குழு” அமைக்கப்படுகிறது”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.