#DMK பவள விழா - ஒளி அலங்காரத்தால் ஜொலிக்கும் அறிவாலயம் மற்றும் அன்பகம்!
திமுக பவள விழாவையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயமும், அன்பகமும் "75" என்ற எண் கொண்ட பவளவிழா இலச்சினையுடன், லேசர் ஒளிக்கற்றைகள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
‘பேரறிஞர்’ அண்ணாவின் பிறந்தநாளான செப். 15-ம் தேதி ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு மற்றும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 116-வது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர்கள் பலரும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருப்படம், திருவுருவச்சிலை உள்ளிட்டவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15), பெரியார் பிறந்தநாள் (செப்.17), திமுக தொடங்கிய நாள் (செப்.17) என்ற மூன்றையும் இணைந்து ஆண்டுதோறும் முப்பெரும் விழாவை நடத்தி வருகிறது திமுக. இந்த ஆண்டு திமுக தொடங்கப்பட்டு 75வது ஆண்டு என்பதால் மிகச் சிறப்பாக கொண்டாட முடிவெடுத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது.
இதையும் படியுங்கள் : மதுரை-சண்டிகர் ரயில் சேவையில் தாமதம் – #SouthernRailway அறிவிப்பு
நாளை மறுநாள் (செப். 17) கொண்டாடவுள்ள திமுகவின் பவள விழாவுக்கான லட்சினையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் இந்த லட்சினை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திமுக பவள விழா லட்சினையில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. உதயசூரியன் அமைப்புடன் 75 என்ற எண்ணும், திமுக பவள விழா என எழுத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அறிவாலயத்திற்கு உள்ளே உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி திருவுருவச் சிலைகளும் வண்ண விளக்குகளால் சிறப்புற அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், திமுக பவளவிழா ஆண்டையொட்டி, முதலமைச்சரால் வெளியிடப்பட்ட பவள விழா ஆண்டு இலட்சினையும் லேசர் ஒளிக்கற்றைகள் மற்றும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. அதற்குமேல் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னமும் மிளிர்கிறது. சாலையில் செல்பவர்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தை ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். திமுக இளைஞரணி தலைமையகமான அன்பகமும், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. அங்கு திமுக பவள விழா ஆண்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள இலட்சினையும் மின்விளக்குகளால் ஒளர்கிறது.