நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம் - பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு !
நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் (பிப் .1ம் ) தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-2026-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து, அம்மாதம் 13-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது.
இந்த நிலையில், வரும் திங்கட்கிழமை (மார்ச் 10 ) நாடாளுமன்றம் மீண்டும் கூட உள்ளது. அப்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில் விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச இருக்கின்றனர்.
இந்த நிலையில், திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை (மார்ச் 9 ) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது, கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.