For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்றத்தில் ஆளுநர்களுக்கு எதிராக தனி நபர் மசோதா தாக்கல் செய்தார் திமுக எம்.பி. வில்சன்!

09:02 PM Feb 02, 2024 IST | Web Editor
நாடாளுமன்றத்தில் ஆளுநர்களுக்கு எதிராக தனி நபர் மசோதா தாக்கல் செய்தார் திமுக எம் பி  வில்சன்
Advertisement

ஆளுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க விலக்கு அளித்துள்ள அரசியல் சாசனப் பிரிவில் திருத்தம் கோரி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன், தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். 

Advertisement

இது தொடர்பாக திமுக எம்.பி. வில்சன் தாக்கல் செய்துள்ள தனி நபர் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாநில அரசின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் உள்ளது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆளுநர் மாநிலத்தின் பெயரளவுத் தலைவராக இருப்பதால், அவர் மாநில அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கட்டுப்பட்டவராவார். ஒன்றிய அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார். ஆளுநர் குடியரசுத் தலைவரின் விருப்பப்படி பணியாற்றுகிறார். எனவே ஆளுநர் என்பவர் மாநில அரசின் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர் ஆவார்.

அரசியலமைப்பின் பிரிவு 361 குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் இருந்து விலக்கு அளிக்கிறது. நாடாளுமன்ற அவைகள் மற்றும் மாநிலங்களுடைய சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய வாக்காளர் குழுவால் இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதால், ஆளுநரை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இணையாக நடத்துவது தவறானதாகும். அந்த வகையில், குடியரசுத் தலைவர் அவர்கள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியத் தலைவராக உள்ள நிலையில், ஆளுநர் வெறும் நியமனம் செய்யப்படுபவராக மட்டுமே உள்ளார். உண்மையில், சொல்லப்போனால் அரசியலமைப்பின் பிரிவு 157 ஆளுநராக நியமிக்கப்படுவதற்காக ஒருவருக்கு மிக அடிப்படையான தகுதிகளை மட்டுமே பரிந்துரைக்கிறது. எனவே, விதிவிலக்கு விஷயத்தில் குடியரசுத் தலைவரையும் ஆளுநரையும் ஒன்றாக பாவிப்பது ஏற்புடையதல்ல..

இது தவிர, ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கட்டுப்பட்டவர். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் கூட குற்ற விசாரணைகளில் இருந்து முழு விலக்களிப்பு பெற்றவர் அல்ல. அனுமதி பெற்று அவர் மீது வழக்கு தொடர முடியும்.. அதேபோல், ஆளுநரை நியமிக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, ஆளுநர் மீது கிரிமினல் குற்றங்களுக்காக வழக்குத் தொடர ஒரு ஏற்பாடு இருக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் உரிமையியல் நடவடிக்கைகளிலிருந்து விலக்களிப்பு எதையும் பெறவில்லை. ஒரு ஆளுநர் எனபவர் சிவில் குற்றங்களுக்காகவோ அல்லது அவரால் இழப்பீடுகளுக்காகவோ ஏற்படுத்தப்பட்ட உரிமையியல் வழக்கிலிருந்து விலக்கு பெற வேண்டும் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. எனவே, மாநில சட்டமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ள, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை விட ஆளுநரை சிறந்த நிலையில் வைப்பது விரும்பத்தக்கதல்ல.

சில ஆளுநர்கள் மீது ஊழல், பாலியல் குற்றங்கள், வன்முறையைத் தூண்டுதல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு நபர், எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும், நீதிமன்றங்கள் மற்றும் நீதி நிர்வாக அமைப்பின் எல்லைக்கு அப்பாற்பட்டவர் என்ற கருத்து ஒரு காலனிய எச்சம் மற்றும் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியாது. ஆளுநர்கள் தங்கள் பதவியை துஷ்பிரயோகம் செய்து அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ அல்லது பொது நலனுக்கு எதிராக செயல்பட்டாலோ அதற்கான சட்ட விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டும்.

ஆளுநர் தனது அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் எந்தவொரு நீதிமன்றத்திற்கும் பதிலளிப்பதிலிருந்து அரசியலமைப்பின் பிரிவு 361 (1) ன் கீழ் விலக்களிப்பு என்பது, அவர் தனது அதிகாரப்பூர்வ முடிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு தனிப்பட்ட முறையில் பதிலளிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த போதுமான பாதுகாப்பாகும். இருப்பினும், ஒரு ஆளுநர் தனது தனிப்பட்ட திறனில் செய்த கிரிமினல் குற்றங்கள் அல்லது சிவில் தவறுகளுக்கு இந்த விலக்களிப்பு நீட்டிக்கப்பட வேண்டிய அவசியமில்லை.. தேர்ந்தெடுக்கப்படாத ஒரு நபருக்கு முழுமையான விதிவிலக்கு என்பது நமது அரசியலமைப்பு அறநெறி அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது.

எனவே, மேற்கண்ட நோக்கங்களை அடைய பிரிவு 361 இல் திருத்தம் செய்ய ஆவண செய்யப்பட்டுள்ளது. அதற்காகவே இந்த மசோதா.

இவ்வாறு திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தனது தனி நபர் மசோதாவில் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement