வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ மகன், மருமகளின் ஜாமின் மனு தள்ளுபடி....!!
பட்டியலின பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளாது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருநருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு முடித்த இளம்பெண் ஒருவர் குடும்ப வறுமை காரணமாக புரோக்கர் ஒருவரின் மூலம் பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டிற்கு வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை எம்எல்ஏ மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் ஆண்டோ மெர்லின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இளம்பெண்ணின் பேட்டிகள் மற்றும் ஏற்பட்ட காயங்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், கடந்த மாதம் 19 ஆம் தேதி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இளம்பெண்ணைத் துன்புறுத்திய புகாரில் திமுக எம்எல்ஏ மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லின் ஆகிய இருவரும் கடந்த 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரும் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர். இந்த நிலையில், தங்களுக்கு ஜாமீன் வேண்டும் எனச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 30/01/2024 அன்று திமுக எம்.எல்.ஏவின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லின் ஆகியோர் ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.