திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்! முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியானது!
பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கினுடைய முதல் தகவல் அறிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளது.
பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகின்றார். இவருக்கு மெர்லினா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இவர்கள் வீட்டில் பட்டியலின இளம் பெண் ஒருவரைக் கடந்தாண்டு முதல் வேலைக்கு வைத்துள்ளனர். இந்த பெண்ணை திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மருமகள் மெர்லினா தாக்கி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எஸ்சி/எஸ்டி சட்டப்பிரிவுகள், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் குடும்பத்துடன் மும்பை சென்றபோது குழந்தைக்கு உணவு தயாரிப்பதில் தாமதமானதால் மெர்லினா ஊர் திரும்பிய பின்பு என்னை துன்புறுத்தி திட்டினார். இது அவர்களது குழந்தை முன்பே நடந்தது. குழந்தை தவறாக நினைக்கக் கூடாது என்பதற்காக பாட்டு போட்டு என்னை ஆட சொன்னார்.
மேலும், அவரது கணவரும் வேகமாக வேலை செய்ய வேண்டும் எனக்கூறி துடைப்பத்தை கொண்டு அடித்தார். துணி துவைத்து கொடுக்கும் போது சிறு கரை இருந்தாலும் அடிப்பதாகவும் எனக்கு சமைக்க துவைக்க தெரியாதென்று சொன்னால் 10 பச்சை மிளகாயை கடித்து சாப்பிட சொல்லி துன்புறுத்தினார்கள்.
எங்கள் அம்மாவை பார்த்து ஏழு மாதங்கள் ஆகிவிட்டது என சொன்னதற்கு டிரஸ் இல்லாமல் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், மூன்று வருடம் இங்குதான் வேலை பார்க்கணும் இல்லையென்றால் எனது அம்மா மீதும் தம்பி மீதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என வாசித்துக் காண்பித்து கையெழுத்திட சொன்னார்கள்.
அடிக்கடி ஜாதி பெயரை சொல்லி அடித்து துன்புறுத்தினார்கள். பொங்கல் விடுமுறைக்காக கடந்த 16ஆம் தேதி எங்க அம்மாவிடம் சென்றபோது நடந்த அனைத்தையும் கூறினேன். அவர் உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.
இதன்படி, எம்எல்ஏ மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா அன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.