மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தை புறக்கணித்த திமுக உறுப்பினர்கள்!
மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஜூன் 1 அன்று நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு கூட்டம் சார்ந்த பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தலைமையில் உத்தங்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக 59 திமுக கவுன்சிலர்கள் சென்றுள்ளனர். இதனால், மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டம் பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாமல் நடைபெற்றது. குறிப்பாக 67 திமுக உறுப்பினர்களில் 8 பேர் மட்டுமே பங்கேற்று இருந்த நிலையில் இவர்களுடன் மேயர், துணை மேயர் உட்பட அதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளை சார்ந்த மொத்தம் 28 கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இதனால் 46 தீர்மானங்கள் கூட்டத்தின் முன் வைக்கப்பட்ட நிலையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாமல் தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என அதிமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தீர்மானங்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் கூட்டம் துவங்கும் போது "ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தான் இப்படி நடந்துள்ளது" எனக்கூறி 46 தீர்மானங்களை நிறைவேற்றினார் மேயர். வழக்கமாக 3 மணி நேரம் நடைபெறும் மாமன்ற கூட்டம் இன்று 1 மணி நேரத்தில் முடிக்கப்பட்டது.