திமுக சட்டத்துறை 3வது மாநில மாநாடு - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் திமுக சட்டத்துறையின் மூன்றாம் மாநில மாநாடு பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பைப் பாதுகாப்பதிலும், சட்டரீதியான போராட்டங்களை நடத்தி பல உரிமைகளை வென்றெடுப்பதிலும், எப்போதும் முன்னணியில் நிற்பது நம் திமுக. இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் நடைபெறக் காரணமே, தந்தை பெரியாரும், திமுகவும் தான் என்பது இந்திய வரலாற்றில் நிலைத்துவிட்ட உண்மை. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, நீதிக்கட்சி அரசால் வழங்கப்பட்ட வகுப்புவாரி உரிமைக்கு, குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
அப்போது தந்தை பெரியாரும், திமுகவும் தமிழ்நாட்டில் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தினர். அதன் தாக்கத்தை உணர்ந்த, பிரதமர் ஜவகர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு, 'மாநில அளவிலான இட ஒதுக்கீட்டை மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம்' என்று முதல் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தது. அன்றைய சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கர் 'இதர பிற்படுத்தப்பட்டவர்' என்னும் பிரிவை ஏற்படுத்தி, இட ஒதுக்கீட்டை உறுதி செய்தார்.
அன்றிலிருந்து தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டிலும் அகில இந்திய அளவிலும் சட்டரீதியாகப் பல முக்கியமான செயற்பாடுகளை, நம் கட்சியும் சட்டத்துறையும் முன்னெடுத்துள்ளன. 'சட்டம் ஒரு இருட்டறை; வக்கீலின் வாதம் ஒரு விளக்கு' என்றார் பேரறிஞர் அண்ணா. அப்படி பல முக்கியமான வழக்குகளில் ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து, உரிமைகளை வென்றது, நம் கழக சட்டத்துறை. மோடியின் தலைமையிலான மத்திய பாஜக அரசு சமூகநீதிக்கு எதிராக செயல்பட்டபோது, தமிழக மருத்துவக் கல்லூரிப் படிப்புக்கான இடங்களில் மத்தியத் தொகுப்புக்கு வழங்கும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) முறையாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமெனக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து வெற்றியும் கண்டோம்.
இப்படி நாம் நடத்திய எண்ணற்ற சட்டப் போராட்டங்களுக்கு நீண்ட பட்டியல் உண்டு. அதேபோல் திமுக அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம், பெண்களுக்கான சொத்துரிமை போன்ற பல சட்டங்கள் இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்திருக்கின்றன. நம் திமுக அரசால் கொண்டுவரப்படும் சட்டங்கள், எதிரிகளால் முறியடிக்கப்படாத அளவுக்கு வலிமையானவையாக இருக்கின்றன என்பதற்கு, உள் இட ஒதுக்கீடு தொடர்பாக, சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பே உதாரணம். ஒடுக்கப்பட்டோரில் ஒடுக்கப்பட்டோரான அருந்ததியர்களுக்கு 2009-இல் 3% உள் இட ஒதுக்கீடு வழங்கி கருணாநிதி உத்தரவிட்டார்.
சமீபத்தில், 'உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு' என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சமூகநீதியை நிலைநாட்டியதுடன் மட்டுமல்லாது, 15 ஆண்டுகளாகத் தொடரும் கருணாநிதியின் சாதனைக்கும் பலம் சேர்த்தது. இன்று மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசால், அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிசம் போன்ற அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைத் தகர்க்கும் முயற்சியில், மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதற்கு எதிராக, இந்தியா கூட்டணி அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டு தினத்தையொட்டி, அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் அரசியல் சட்டத்தின் முகவுரையை வாசிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர். கூட்டாட்சித் தத்துவத்தையும் மதச்சார்பின்மையையும் சீர்குலைக்கும் வகையில், மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவரும் ‘பொது சிவில் சட்டம்',
'ஒரே நாடு ஒரே தேர்தல்', 'வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா' ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்து, நாடாளுமன்றத்தில் போராடி வருகிறோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் கொண்டுவரப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை, நம் திமுக சட்டத்துறை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள, நம் தமிழ்நாடு முதலமைச்சர், ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில், ஒரு நபர் கமிட்டி அமைத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்தக் குழுவும் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், திமுக சட்டத்துறை, மூன்றாவது மாநில மாநாடு நடத்துவதை எண்ணி, மகிழ்ச்சியடைகிறேன். அரசியல் சட்டத்தின் மாண்பை உயர்த்திப்பிடிக்கும் வகையிலும், அரசியல் சட்டத்துக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து விவாதிக்கும் வகையிலும், இந்த மாநாட்டின் கருத்தரங்கும் கலந்துரையாடலும் திட்டமிடப்பட்டிருப்பது மிகப்பொருத்தமானது. சமூகநீதி, மொழியுரிமை, மாநில உரிமைகள், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை சட்டரீதியாக நிலைநாட்டும் வகையில், நம் திமுக சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.