திமுகவுக்கு முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவர் கருணாஸ் ஆதரவு!
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் ஆதரவு தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இந்நிலையில் நடிகரும், புலிப்படைக் கட்சித் தலைவருமான கருணாஸ் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த, அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த நாடாளு மன்றத்தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும். மதவெறி சக்திகளை அடியோடு விழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற, மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க இந்தியா கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் திமுகவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது.
இனி மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்திய பெருமுதலாளிகளின் கையில், கார்ப்ரேட்டின் கொள்ளைக் கூடாரமாகிவிடும். கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பாஜக அரசின் ஆட்சியை அகற்றிட, தமிழ்நாட்டில் அதிமுகவை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும். திமுகவிற்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில் பலம் வாய்ந்த இக்கூட்டணியை 40 இடங்களிலும் வெற்றிப்பெற செய்ய திமுகவிற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்கள் விரோத சனாதன சக்திகளை விரட்ட அதிமுகவை வீழ்த்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“சீர் மரபினர் குறித்து முதலமைச்சர் வெளியிட்ட உத்தரவுக்கு நன்றி தெரிவித்தோம். வரக்கூடிய தேர்தலில் மதவாத சக்தியை, மதத்தை வைத்து மக்களை பிரிக்கும் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணியை ஆதரிப்பதோடு, திமுகவிற்கு ஆதரவு அளிப்போம். திமுக கூட்டணிக்கு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளோம். மக்களை யார் ஒருவர் முட்டாள் என நினைக்கிறார்களோ, அவர்களே அடிமுட்டாள்.
ஒரு சீட் தான் எதிர்பார்த்தேன் இரண்டு சீட் கொடுத்திருக்கிறார் என்று டி.டிவி சொல்வது வேதனை அளிக்கிறது. இந்த முடிவை (பாஜக கூட்டணி) 2017ல் எடுத்திருந்தால் கூவத்தூர் சம்பவம் நடந்திருக்காது. சசிகலா சிறைக்கு சென்று இருக்க மாட்டார்கள். மக்கள் எளிதாக இதனை மறந்திருக்க மாட்டார்கள். ஒபிஎஸ்ஐ பொறுத்தவரை அவரவர் செய்த செயல் அவர்களுக்கு திரும்ப நடக்கிறது.
ஆளுநர் பதவியினை ராஜினாமா செய்து விட்டு கட்சி பணியில் ஈடுபடுவது உலகில் வேறெங்கும் நடைபெறாது. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன் நான். நன்றி மறக்காதவன். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி உருவாக்கிய நிலையை அனைவரும் அறிவர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் உரிய அங்கீகாரம் பெற்றவர்கள் முக்குலத்தோர். இப்போது அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கு எடப்பாடி பழனிச்சாமிதான் தான் காரணம்”
இவ்வாறு நடிகர் கருணாஸ் தெரிவித்தார்.