”சமூக நீதிப் பற்றி பேச திமுகவுக்கு தகுதியில்லை” - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்..!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”தாமிரபரணி என்ற ஒரு ஆற்றை காப்பாற்ற முடியவில்லை என்றால் ஆட்சியில் இருக்காதீர்கள். கூவத்தை தாமிரபரணியாக மாற்றங்கள் என்று கேட்கவில்லை தாமிரபரணியை கூவமாக மாற்றி விடாதீர்கள். தாமிரபரணி ஆற்றை நம்பி 40 முதல் 50 லட்சம் மக்கள் நம்பி இருக்கிறார்கள். ஐந்து மாவட்டங்களில் வாழ்வாதாரமான தாமிரபரணி ஆற்றை பாதுகாக்காதது வெட்கக்கேடானது. தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க மத்திய அரசும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கரூர் விவகாரம் குறித்து உண்மையான பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்தால் கைது செய்வது. தொலைக்காட்சிகள் உண்மையை சொன்னால் அவர்களை தடை செய்வது. இது என்ன மாதிரியான ஆட்சி..? உண்மை வெளிவந்துவிடும் என அச்சமா..?
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். சட்டமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஒரு பொய்யை சொல்லி வருகிறார். சாதி வாரி கணக்கெடுப்பு என்ற பெயர் பிடிக்கவில்லை என்றால் கலைஞர் கணக்கெடுப்பு என்ற பெயரில் நடத்துங்கள். சமூக நீதிப் பற்றி பேச திமுகவுக்கு தகுதியில்லை" என்றார்.