For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தமிழ்நாட்டில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது” - திமுக பவள விழாவில் முதலமைச்சர் #MKStalin பேச்சு!

07:59 PM Sep 17, 2024 IST | Web Editor
“தமிழ்நாட்டில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது”   திமுக பவள விழாவில் முதலமைச்சர்  mkstalin பேச்சு
Advertisement

திமுகவின் 100ம் ஆண்டு விழா நடைபெறும் காலத்தில் கூட திமுக அரசுதான் ஆட்சியில் இருக்கும் எனவும், இன்னும் 100 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் திமுகவின் தேவை உள்ளது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக பவளவிழாவில் தெரிவித்துள்ளார்.

Advertisement

‘பேரறிஞர்’ அண்ணா பிறந்த விழா, திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என திமுகவின் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ மைதானத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் திமுகவின் முப்பெரும் விழா விருதுகள், மூத்த தொண்டர்களுக்கான பணி முடிப்பு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த மாநாட்டில் 80,000 தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொண்டர்கள் அனைத்து இடத்திலும் இருந்து நிகழ்ச்சி மேடையை காண 18 இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, 170 அடி நீளத்திற்கு கோட்டை வடிவிலான முகப்பு அமைக்கப்பட்டிருந்தன. மைதானம் முழுவதும் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள், திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் குறித்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருகில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அமர்ந்திருப்பதை போல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் நாற்காலியில் அமர்ந்திருந்தபடி ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி வாழத்துரை வழங்கினார். என் உயிரிலும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என அதே கரகர குரலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்துரை வழங்கியதால் அரங்கமே அதிர்ந்தது.

தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உரையாற்றினார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது,

“கட்சி நிர்வாகிகளால் தான் திமுக செழிப்பாக உள்ளது. நீங்கள் இல்லாமல் நான் இல்லை, கட்சி இல்லை. உங்களுடைய வேர்வை, ரத்தம், மூச்சுக்காற்றால் தான், இத்தனை ஆண்டு காலம் திமுக தலை நிமிர்ந்து, கம்பீரமாக நிற்கிறது. அந்த நன்றி உணர்ச்சியோடு தான் உங்கள் முன் கம்பீரமாக நின்று கொண்டு இருக்கிறேன். திமுகவின் பவள விழா- முப்பெரும் விழா விழாவை ஏற்பாடு செய்திருக்கும் மாரத்தான் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் எந்தப் பணியை கொடுத்தாலும் சிறப்பாக செய்து காட்டுவார் என்பதற்கு இந்த விழா எடுத்துக்காட்டு.

14 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பினேன். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க சென்றோம் என்று சொல்வதை விட வென்றோம் தான் சொல்ல வேண்டும். பல்லாயிரகணக்கான முதலீடுகளும், பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் கிடைத்திருக்கிறது. அதை எண்ணி நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அமெரிக்க வாழ் தமிழர்கள் கொடுத்த வரவேற்பு, இந்தியாவின் மற்ற மாநில மக்களும் வியந்து பேசும் அளவிற்கு ரீச் ஆச்சு. அதற்கு காரணம் நாம் எப்போதும் மக்களோடு, மக்களாக இருக்கிறோம்.

ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரணமான சாதனை அல்ல. இதற்கு நமது அமைப்பு முறைதான் காரணம் என்பதை, நான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன்

சைதாப்பேட்டை முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் தொகுதி. எனக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியது தமிழக மக்கள் தான். பெரியாருக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கியவர்கள் பெண்கள் தான். அந்த பெரியார் விருதை தற்போது ஒரு பெண் பெறுவது பெருமையாக உள்ளது. பெரியாரை சந்தித்ததால் தான் ஜெகத்ரட்சகன் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார் . அதனால்தான் இவ்வளவு பல்கலைக்கழகங்களை அவர் செயல்படுத்தி வருகிறார் என நினைக்கிறேன்.

உங்களைப் பார்த்தது எங்களுக்கு விருது கிடைத்தது போல் உள்ளது. விருது பெற்றவர்களின் உழைப்பாள் தான் கட்சி சிறப்பாக செயல்படுகிறது. கருணாநிதியின் வாழ்வே முடிந்துவிட்டாலும் கட்சி முடிவு பெறாது என்று கூறியவர் கருணாநிதி. உலகிலேயே தலைவன் தொண்டன் என்ற ஒரு அமைப்பு இல்லாமல் அண்ணன், தம்பி போன்ற ஒரு கட்டமைப்பு உள்ளது திமுகவில் தான். நூறாம் ஆண்டு கால விழா நடைபெறும் காலத்தில் கூட திராவிட அரசுதான் ஆட்சியில் இருக்கும். இன்னும் 100 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் திமுகவின் தேவை உள்ளது..

திமுக ஆட்சியில் இலவச பேருந்து, காலை உணவு திட்டம், நான் முதல்வன் போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழகத்தை வளமிக்க மாநிலமாக திமுக அரசு மாற்றியுள்ளது. இன்று க்ரீம் பன்னுக்கு என்ன வரி என்று கேட்கக்கூட உரிமை இல்லாத நிலை உள்ளது. ஒரு சரியான மத்திய அரசு அமையவில்லை. தமிழகத்திற்கு முறையான நிதி கொடுப்பதில்லை. நம்முடைய கோட்டை அங்கு இருந்தாலும், அதில் இருக்கக்கூடிய புல்லை கூட நம்மால் வெட்ட முடியவில்லை என்று கருணாநிதி கூறினார். முழுமையான நிதி கிடைத்தால் தமிழகத்தை ஒரு சிறந்த மாநிலமாக மாற்ற முடியும்.

இந்த தேர்தலை தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும். ஆனவத்தால் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். உங்கள் மேல் உள்ள நம்பிக்கையால் சொல்கிறேன். எந்த இயக்கமாக இருந்தாலும் அதற்கு கொள்கை தேவை, அதனை வழிநடத்த தலைமை தேவை. இதுபோன்று எந்த கட்சியும் வெற்றி பெறவில்லை என்று 2026-ல் நாம் வெற்றி பெற்ற பிறகு அதனை சொல்ல வேண்டும். அந்த வரலாறு எதிர்கொள்ள நீங்கள் தயாரா?

Tags :
Advertisement