For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“எந்த வாக்குறுதியையும் திமுக இதுவரை நிறைவேற்றவில்லை!” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

04:04 PM Feb 14, 2024 IST | Web Editor
“எந்த வாக்குறுதியையும் திமுக இதுவரை நிறைவேற்றவில்லை ”   எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Advertisement

2021 சட்டமன்ற தேர்தலின் போது அளித்த எந்த தேர்தல் வாக்குறுதியையும் திமுக இதுவரை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று அவர் பேசியதாவது:

கோடை காலத்தில் கடும் வெட்பம் நிலவும் என்று கூறப்படும் நிலையில் இந்த அரசு கோடை காலத்தை மின் தேவையை சமாளிக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன என்று அறிய விரும்புகிறேன். கோடைகாலத்தில் வீடுகளில் அதிக அளவு மின் நுகர்வு செய்யப்படும். மேலும் வேளாண்மை,  தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், என்று அனைத்து தரப்பினருக்கும் தேவைப்படும் மின்சாரத்தை இந்த அரசு அரசு எடுத்த நடவடிக்கைகளை அறிய விரும்புகிறேன்.எனவே குறைந்தபட்சம் ஒருநாள் தேவை 19,000 மெகாவாட் ஆக அதிகரிக்கும் என்று தெரிய வருகிறது. ஏனெனில் தமிழகம் முழுவதும் அணைகளில் தண்ணீர் அளவு குறைவாக இருப்பதால் நீர்மின் நிலையங்களில் எதிர்பார்த்த மின்சாரத்தை எதிர்பார்க்க முடியாது.
எனவே முன் எச்சரிக்கையாக அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு,  காற்றாலை, தனியார் மின் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளையும் ஆராய்ந்து மின் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, வரும் கோடை காலத்தில் மக்களை காக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை அறிய விரும்புகிறேன்.

ஏற்கனவே இரண்டு முறை மின்கட்டணம் கடுமையாக உயர்த்தியதுடன், மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி அதன்மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் என்று அனைத்துக் கட்டணங்களையும் உயர்த்தியதால்,தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகள், நூல் மில்கள், காட்டன் மில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இந்தத் தொழிலே முடங்கி உள்ளன.

தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் நெசவுத் தொழிலின் இன்றைய நிலை என்ன? மாநில அரசின் அதிகமான மின்கட்டண உயர்வால் லட்சக்கணக்கான விசைத்தறிகள் இயங்க முடியாமல் மூடிக்கிடக்கின்றன. இத்தொழிலை நம்பியுள்ள நெசவாளர்கள் மாற்று தொழிலுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இக்கட்டான இந்த காலக்கட்டத்தில் சிறு குறு தொழில்களுக்கும், விசைத்தறிகளுக்குமான மின் கட்டண உயர்வை கணிசமாக குறைப்பதோடு,உயர்த்தப்பட்ட நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம் மற்றும் சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு விதித்த கட்டணத்தை ரத்து செய்தால்தான் இந்தத் தொழில்கள் புத்துயிர் பெற்று அதைச் சார்ந்த சுமார் லட்சக்கணக்கான மக்கள் புது வாழ்வை பெறமுடியும். ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு மற்றும் வேட்டி சேலை ஆகியவை அனைத்து பயனாளிகளும் பெறும் வரை தொடர்ந்து வழங்கப்படும்.

ஜெயலலிதா ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அரசிலும், பொங்கல் பரிசு மற்றும் விலையில்லா வேட்டி மற்றும் சேலை அனைத்து பயனாளிகளும் பெற்றுக்கொள்ளும் வரை தொடர்ந்து வழங்கப்பட்டது. ஆனால் திமுக அரசு இந்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதிவரை, 5 நாட்கள் மட்டுமே நேரடியாக பொங்கல் பரிசு மற்றும் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கியது.

பொங்கல் பண்டிகைக்காக முன்னரே சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களும், கூட்டம் குறைந்தவுடன் பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று எதிர்பார்த்தவர்கள், 18.1.2024 அன்று நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பை வழங்குமாறு கேட்டபோது, ஜனவரி 14-ஆம் தேதியோடு பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பை நிறுத்தச் சொல்லி அரசு உத்தரவிட்டதாவும், மேலும் வழங்கப்படாத மீதுமுள்ள இருந்த பொங்கல் பரிசுப் பணத்தை அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் நியாய விலைக் கடை ஊழியர்கள் தெரிவித்ததையடுத்து இந்த ஆண்டு பொங்கல் பரிசு வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
எனவே உடனடியாக பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பை வாங்காத பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துகிறேன்.

இந்த அரசு பதவியேற்றதிலிருந்து பல குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் எத்தனைக் குழுக்கள் அறிக்கை அளித்துள்ளன. அந்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுமா இந்த அரசு.

இந்த அரசு பதவியேற்றதிலிருந்து ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டால், அதற்கு தீர்வு காண்பதற்கு பதிலாக அதைப் பற்றி ஆய்வு செய்ய குழு அமைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அப்படி அமைக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை எவ்வளவு? அந்த குழுக்கள் அளித்த அறிக்கைகள் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன ? இன்னும் அறிக்கை அளிக்காத குழுக்கள் எவ்வளவு ? இதை பற்றி விவரமாக ஒரு வெள்ளை அறிக்கையை இந்த அரசு வெளியிட கேட்டுக்கொள்கிறேன்.

அரசின் கடன் சுமை

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 2005-2006ல் மொத்த கடன் அளவு ரூ.45,000 கோடியாக இருந்தது. இது திமுக ஆட்சியில், 2010-11ல் மொத்த கடன் அளவு ஒரு லட்சம் கோடியாக உயர்ந்தது. மார்ச் இறுதியில் 2021 அன்று மொத்த கடன் அளவு 5.18 லட்சம் கோடியாக உயர்ந்தது. (இதற்கு காரணம் 2020ம் ஆண்டு ஜனவரி முதல் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கொரோனா நோய் தொற்று வருவாய் இழப்பு சுமார் 50 ஆயிரம் கோடி. மேலும் மின் வாரியத்தின் (உதய் திட்டம்) 22,000/- கோடி கடனை அரசு ஏற்றது)

கடன் அளவு

திமுக ஆட்சியில் இரண்டு ஆண்டுகள் வாங்கிய கடன் அளவு

1 2021-2022 ரூ. 84,747 கோடி (திமுக ஆட்சி)

2. 2022-2023 ரூ.5. 72,864 கோடி (திமுக ஆட்சி)

திமுக ஆட்சியில் 2023-24ல் கடன் வாங்க உத்தேசம்

3. 2023-2024 ல் ரூ.90,119 கோடி (திமுக ஆட்சி)

ஆக திமுக அரசு மூன்று ஆண்டுகளில் கடன்அளவு 2,47,730 கோடி ஆகும்.

அதாவது 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் வாங்கிய உண்மையான கடன்: 5.18 லட்சம் - 1 லட்சம் = 4.18 லட்சம் கோடி.. கொரோனா காலம் - அரசின் வருவாய் ஒரு வருடம் இல்லை. ஆனால் செலவினம் அதிகம். எனினும் கடன் அளவு கட்டுக்குள் இருந்தது. திமுக 3 ஆண்டுகளில் வாங்கிய கடன் 2,47,730 கோடி ஆகும்.
ஆனால் நிதிநிலை அறிக்கையில் மொத்த கடன் அளவு 7,26,028 கோடி என்று உள்ளது. அதாவது சுமார் 20 ஆயிரம் கோடி குறைவாக காணப்படுகிறது.

பேருந்துகள் வாங்கியது தொடர்பாக  

2011- 2021 வரை சுமார் 15,500 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது.  எனது தலைமையிலான ஆட்சியில் மட்டும் சுமார்

ஜூலை 4, 2018- 515 பேருந்துகள்

அக்டோபர் 11, 2018- 471 பேருந்துகள்

ஜனவரி 7, 2019-555 பேருந்துகள்

மார்ச் 5, 2019- 500 பேருந்துகள்

ஜூலை 4, 2019-500 பேருந்துகள்

ஆகஸ்ட் 14, 2019-500 பேருந்துகள்

செப்டம்பர் 26, 2019-370 பேருந்துகள்

ஜனவரி 29, 2020-240 பேருந்துகள்

என மொத்தம் 19 மாதங்களில் சுமார் 3650 பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் இந்த அரசு 2021 மற்றும் 2022ம் ஆண்டு போக்குவரத்து மானிய கோரிக்கைகளில், ஒவ்வொரு ஆண்டும் 2,213 டீசல் பேருந்துகளையும்,  500 மின்சார பேருந்துகளையும் வாங்க உள்ளதாகவும்,  2023ம் போக்குவரத்து மானிய கோரிக்கையில் 3,213 டீசல் பேருந்துகளையும் 500 மின்சார பேருந்துகளையும் வாங்க உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள்.  இதன்படி பார்த்தால் 2213 + 2213 + 3213 = 7,639 டீசல் பேருந்துகளையும், 1,500 மின்சார பேருந்துகளையும் வாங்கியிருக்க வேண்டும். ஆனால் சென்ற வாரம் 100 புதிய பேருந்துகளை முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்ததாக ஊடகங்களில் பார்த்தோம்.

நாங்கள் 10 ஆண்டுகளில் சுமார் 16,500 புதிய பேருந்துகளை வாங்கி மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தினோம்.  நேற்று கூட போக்குவரத்து துறை அமைச்சர் சட்டமன்றத்தில் எங்கள் ஆட்சியில் குறைவான பேருந்துகளே வாங்கியதாக உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார். 16,500 பேருந்துகள் குறைவா ? 100 பேருந்துகள் அதிகமா ? என்பதை தாங்களே விளக்க வேண்டும்.

அடுத்து இந்த அரசு, அரசு பேருந்துகளின் ஆயுட் காலத்தை அதிகப்படுத்தியுள்ளது.
அதன்படி அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் ஆயுட்காலம் 3 ஆண்டுகளை 7 ஆண்டுகளாகவும்,  ஒடிய தூரம் 7 லட்சம் கி.மீ என்பதை 12 லட்சம் கி.மீ-ராகவும், இதர அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் ஆயுட்காலம் 6 ஆண்டுகளை 9 ஆண்டுகளாகவும், ஒடிய தூரம் 7 லட்சம் கி.மீ என்பதை 12 லட்சம் கி.மீ-ராகவும் உயர்த்தி அரசாணை எண். 70, நாள் 8.7.2021 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கண்மூடித்தனமாக பேருந்தின் ஆயுட்காலத்தையும், ஓடிய தூரத்தையும் நீட்டித்து, புதிய பேருந்துகள் வாங்காமல், இருக்கும் பேருந்துகளையும் முறையாக பராமரிக்காத காரணத்தால் மக்களின் உயிரோடு இந்த அரசு விளையாடுகிறதோ என்று தோன்றுகிறது. நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் பல விபத்துக்களை கூறலாம். பிப்ரவரி 6ந்தேதி சென்னை, அமைந்தகரையில் ஓடும் மாநகரப் பேருந்தின்அடிப்பலகை உடைந்து கீழே விழுந்த பெண் அதிர்ஷ்டசவசமாக உயிர் தப்பினார். இந்நிகழ்வு அனைத்து ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களிலும் வெளிவந்தது. அதுபோலவே ஒடும் பேருந்தின் பின்புற இரு சக்கரங்களிலும் 4 டயர்களுக்குப் பதில் இரண்டு டயர்களுடனும், படிக்கட்டு இல்லாமல் ஓடிய பேருந்து பேருந்துகள் என்று கூறிக்கொண்டே போகலாம். குறை சொல்வதற்காக இதை கூறவில்லை. பேருந்துகளின் ஆயுட்காலத்தையும், தூரத்தையும் குறைத்தது தவறு. எனவே பழையபடி அரசாணையின்படி ஆயுள் முடிந்த பேருந்துகளை உடனடியாக மாற்றி, புதிய பேருந்துகளை வாங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

2021, சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் (திமுக தேர்தல் வாக்குறுதி எண் 152) உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்த நிலையில், இதுவரை எந்த வாக்குறுதியையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்தும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 96 மாதங்கள் அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகை ஓய்வு பெற்று 13 மாதங்களான தொழிலாளர்களுக்குரிய பணப் பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும்; ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான 96 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையினை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

போக்குவரத்துத் துறை அமைச்சருடனான அனைத்துத் தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தையின் போது, தங்களது நியாயமான 6 கோரிக்கைகளில் ஒய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 96 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளதாகவும், அதில் இந்த மாதத்தில் இருந்து அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கினால்கூட போதும் என்றும், அதற்கு 70 கோடி ரூபாய் மட்டுமே ஆகும் என்றும், நிலுவையில் உள்ள 96 மாதகால அகவிலைப்படியையும் மற்றும் இதர கோரிக்கைகளையும் பொங்கலுக்குப் பிறகுகூட பேசிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் இந்த அரசு இந்த ஒரு கோரிக்கையைக் கூட ஏற்கவில்லை. தற்போதும் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எங்களது ஆட்சிக் காலத்தில், ஒய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி நிலுவையினை வழங்குவதற்காக, அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கருடன் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடைசியாக 2018-ஆம் ஆண்டு பேசியபோது, உடனடியாக, ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் அந்த மாதத்திலிருந்து பென்ஷனுடன் சேர்த்து வழங்குவதாகவும், அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையினை தவணை முறையில் தருகின்றோம் என்றும் உறுதி அளித்தார்.
ஆனால், திமுக-வின் தொ.மு.ச. தொழிற்சங்கம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
2020 முதல் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு சுமார் 8 மாதங்கள் பேருந்துகளே இயக்கப்படாத நிலையில், அதிமுக அரசு, தொழிலாளர் நலன் கருதி அனைவருக்கும் முழு சம்பளமும், 2020-ஆம் ஆண்டு தீபாவளிக்கு 10 சதவீத போனசும் வழங்கியது. இந்த அரசு, போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எதிர்கட்சித்தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசினார்.

Tags :
Advertisement