"எந்த ஒரு மொழியையும் யாரும் கற்றுக்கொள்ள திமுக தடையாக இருந்ததில்லை" - #TiruchiSiva எம்.பி. விளக்கம்
யாரும் எந்த ஒரு மொழியையும் கற்றுக்கொள்ள திமுக தடையாக இருந்ததில்லை என திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் கடந்த 25ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சூழலில், குளிர்கால கூட்டத்தொடரில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் தான் இந்தி கற்க முற்பட்டபோது தடுக்கப்பட்தாக கூறினார். இந்த கூற்றுக்கு திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா கூறியிருப்பதாவது,
"யாரும் இந்தியை படிக்கவே கூடாது என்று திமுக குறுக்கே நிற்பது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், யாரும் எந்த ஒரு மொழியையும் கற்றுக்கொள்ள திமுக தடையாக இருந்ததில்லை. ஒரு மொழி மற்ற மொழி மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதே திமுக-வின் நிலைப்பாடு. நாடு சுதந்திரம் அடைந்தபோதிலிருத்தே இந்தி மொழி என்பது இந்தி பேசாத மக்கள் மீது திணிக்கப்பட்டு வந்தது. மக்கள் விரும்பும் வரை இந்தி திணிக்கப்படாது என்று அப்போதைய பிரதமர் நேரு உறுதி அளித்தார்.
ஆனால் தற்போது ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றம், மக்களுக்கான திட்டம் என எங்கு பார்த்தாலும் இந்தியை திணிக்கிறது. இதைதான் திமுக எதிர்க்கிறது. இந்தி மொழியை கற்று தரும் இந்தி பிரச்சார சபா தலைமையிடம் சென்னையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அங்கு லட்சக்கணக்கானவர்கள் படித்து பட்டம் பெறுகின்றனர்.
ஆனால் அதற்கு திமுக குறுக்கே நிற்கவில்லை. இந்தி மொழியை படிக்கவோ, கற்றுக் கொள்ளவோ கூடாது என்று நினைத்திருந்தால் இந்தி பிரச்சார சபா அங்கு இருந்திருக்காது. ஆனால் திமுக-வின் நிலைப்பாடு அதுவல்ல. மாறாக எந்த ஒரு மொழியும் மற்றொரு மொழி மீது ஆதிக்கம் செலுத்துவதை ஏற்கமாட்டோம். குறிப்பாக இந்தி எங்களை ஆதிக்கம் செலுத்துவதை எல்லா காலத்திலும் எதிர்த்து கொண்டே தான் இருப்போம்"
இவ்வாறு திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.