“தமிழகத்தில் திமுக வலிமையான கட்டமைப்போடு உள்ளது” - ‘நாதக’வை விட்டு விலகிய கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பேட்டி!
கோவை வடக்கு மாவட்ட நாதக நிர்வாகிகள் அனைவரும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியதிலிருந்தே, அவரின் அரசியல் பிரவேசம் தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துமா? திராவிட கட்சிகள் உடையுமா? வாக்குகள் பிரியுமா? என பல கேள்விகள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், தவெகவில் இணைந்தவர்கள் பெரும்பாலானோர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தான் என தகவல்கள் கூறுகின்றன.
அதை உறுதி செய்யும் வகையில் கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றம்சாட்டி அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கோவை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நாதக பொறுப்பாளர்கள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக கோயம்புத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் அபிராமி, வடக்கு மாவட்ட வணிகர் பாசறை செயலாளர் செந்தில்குமார், வடக்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஏழுமலை பாபு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம்,
“ஒட்டு மொத்தமாக கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் வெளியேறுகிறோம். 20க்கு மேற்பட்ட பொறுப்பாளர்கள் வெளியேறுகிறோம். முன்னுக்கு பின் முரணான பேச்சுகளால் கொங்கு மண்டலத்தில் அரசியல் நடத்த முடியாது. மாற்றத்திற்காக அரசியலில் இறங்கினோம். அருந்ததியர் சமூகம் பற்றி சீமான் பேசும் போது, கொங்கு மண்டலத்தில் பெரிதாக பாதிப்பு ஏற்பட்டது.
அதிகாரத்திற்கு வர வேண்டும். முதலமைச்சராக வர வேண்டும் என்கிற பயணம் அவரிடமில்லை. சீமான் கொள்கையில் முரண்படுகிறார். தென்மாவட்டத்தில் ஒரு சமூகத்தை உயர்த்தி பேசுகிறார். சில சமூகத்தை தாழ்த்தி பேசுகிறார். அவரின் கொள்கை முரணிலிருந்து வெளியேறுகிறோம். எந்த கட்சியிலும் தற்போது இணைவதாக இல்லை. விரைவில் முடிவெடுப்போம்.
சீமானை விட விஜய் பெரிய ஆளுமை இல்லை. சீமானை தவிர கட்சியில் அடுத்த கட்ட தலைமை இல்லை. அவர் தனித்து நிற்பது பெருமையாகதான் உள்ளது. ஆனால் அவர் வேட்பாளர் தேர்ந்தெடுப்பதில் தொய்வு. அதேபோல் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டத்திற்கு கூட வருவதில்லை. மக்களிடமிருந்து நாம் தமிழர் கட்சி விலகி நிற்கிறது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களிலிருந்து நாங்கள் விலகுகிறோம். அவரிடம் சில பிரச்னைகளை தொடர்ந்து சொல்ல முடியவில்லை.
எங்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரமில்லை. கட்சியில் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறார். ஆனால் யாருக்கு கொடுப்பது என்பதில்தான் இருக்கிறது. கடந்த 2 ஆண்டாக கட்சி செல்லும் விதம் எங்களுக்கு ஏற்கும்படியில்லை. தமிழகம் முழுவதும் பல நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். பல மொழி பேசுபவர்கள் தமிழகத்தில் உள்ளனர். ஆனால் மொழியை வைத்தும் மட்டும் நாம் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது. தமிழகத்தில் திமுக வலிமையான கட்டமைப்போடு உள்ளது. நாம் தமிழர் கட்சியின் கொள்கையோடு நாம் தமிழகத்தில் இனி பயணிக்க முடியாது” என தெரிவித்தனர்.