”பாஜகவுடன் திமுக ரகசிய உறவு வைத்துள்ளது” - தவெக தலைவர் விஜய் விமர்சனம்..!
தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று அவர் நாமக்கல் மாவட்டம் பி.கே.புதூர் பகுதியில் மக்களை சந்தித்தார். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் வாகனம் மீது நின்றபடி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியதாவது,
”ஒரு நாளைக்கு 5 கோடி முட்டையை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் நாமக்கல்லில் முட்டைகள் வீணாகாமல் பாதுகாக்க முட்டை சேமிப்பு கிடங்கு வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருக்கிறது; அதைப்பற்றி இதுவரை ஆண்ட மற்றும் ஆளுகிற கட்சிகள் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்த கிட்னி திருட்டு சம்பவம் கந்து வட்டி கொடுமையால் நிகழ்கிறது. இது குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தவெக ஆட்சி அமைந்தால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைக்கு குரல் கொடுக்கப்படும். நடைமுறைக்கு எது சாத்தியமோ அது மட்டுமே சொல்வோம். திமுக போல பொய்யான வாக்குறிதிகளை தர மாட்டோம். செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும். காற்றில் கப்பல் விடப்படும். வீட்டினுள் ஏரோபிளேன் விடப்படும் இப்படி சிஎம் அடிச்சிவிடுவது போல நாமும் சொல்ல முடியுமா..?.
சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சுப்பராயனுக்குமணிமண்டபம் கட்டுவோம் (வாக்குறுதி எண் 456) என்றார்கள். ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானியக் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் (வாக்குறுதி எண் 50) என்றார்கள். கொப்பரை தேங்காயை அரசே கொள்முதல் செய்து, அதிலிருந்து தேங்காய் எண்ணெய் எடுத்து நியாயவிலைக்கடையில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கபடும் (வாக்குறுதி எண் 66) என்றார்கள். நியாய விலைக்கடையில் நாட்டுசர்க்கரை, வெல்லத்தை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கபடும் (வாக்குறுதி எண்68) என்றார்கள்.ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் (வாக்குறுதி எண்152 ) என்றார்கள்.இந்த வாக்குறிதிகளை சொன்னார்களே செய்தார்களா? வடிவேலு ஒரு படத்தில் காலி பாக்கெட்டை எடுத்து காட்டுவதுபோல் வாக்குறுதிகள் நிலை உள்ளது.
பாஜகவுடன் ஒத்து போக மாட்டோம். மூச்சுக்கு 300தரம் அம்மா என்று சொல்லிவிட்டு தற்போது பாஜக வுடன் கூட்டணி வைத்தவர்கள் போல நாங்கள் இருக்க மாட்டோம். எதற்காக சந்தர்ப்பவாத கூட்டணி என்று உண்மையான புரட்சிதலைவர் எம்ஜிஆர் தொண்டர்கள் அவர்களை பார்த்து கேட்கின்றனர். பா.ஜக அதிமுக கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் திமுக பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளது. வெளியில் அடித்து கொண்டு உள்ளுக்குள் கூட்டணி அமைத்துள்ளனர். நீங்கள் திமுகவிற்கு ஓட்டு போட்டால் அது பாஜகவிற்கு போட்டதாகிவிடும். மோசமான ஆட்சி கொடுக்கும் திமுக ஆட்சிக்கு வரவேண்டுமா அல்லது டிவிகே ஆட்சி அமைக்க வேண்டுமா..?. நீங்கள் முடிவு செய்யுங்கள். என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்கள். ஒரு கை பார்த்து விடுவோம்” என்று பேசினார்.