For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் திமுக அரசு உறங்கி கொண்டிருக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
12:41 PM Mar 23, 2025 IST | Web Editor
 சட்டம்  ஒழுங்கை பாதுகாக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்    அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

Advertisement

"மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற ரவுடி நள்ளிரவில் அவரது வீட்டு வாயிலில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் திட்டமிட்ட படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் அதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் மதுரை மாநகர திமுக நிர்வாகி வி.கே.குருசாமியின் உறவினர் ஆவார். அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. காளீஸ்வரனுக்கும், அவரது எதிர் குழுவினருக்கும் இடையே தொடர்ந்து நடந்து வரும் மோதலில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த படுகொலையும் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காளீஸ்வரனின் எதிரிகள் சிறையில் இருந்த படியே சதித்திட்டம் தீட்டி இந்தக் கொலையை நடத்தியிருப்பதாகவும் தெரிகிறது.

தமிழ்நாட்டில் கொலைகள் நடக்கும் போதெல்லாம் அவை தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டது என்றும், கொலையாளிகளை விரைவாக கைது செய்து விட்டோம் என்றும் கூறி சிக்கலை திசை திருப்புவதையே திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. ஆனால், காளீஸ்வரன் விவகாரத்தில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரிந்தும் கூட, சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதித் திட்டத்தை முறியடிக்க முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 4.52 படுகொலைகள் வீதம் திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6,597 படுகொலைகள் நடந்துள்ளன. இந்த எண்ணிக்கை அச்சமூட்டும் வகையிலும், கவலையளிக்கும் வகையிலும் இருக்கும் போதிலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைத் தடுத்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் திமுக அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது. இனியாவது திமுக அரசு அதன் உறக்கத்தைக் கலைத்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement