"திமுக அரசு பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது" - எல்.முருகன் குற்றச்சாட்டு!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை பாஜக சார்பில் புதிதாக பொறுப்பு வழங்கப்பட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதனை தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சி சார்ந்த ஆலோசனைகளில் ஈடுபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அரசியல் செய்வதாகவும், ஆளுநரை பொறுத்தவரை திமுக செய்யும் ஊழல்களுக்கு தடையாக இருப்பதால் அவரிடம் வேண்டுமென்றே தவறான கோப்புகளை அனுப்பி பிரச்சனை செய்வதாக பேசினார்.
கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரை அது ஒரு துயர சம்பவம், அதில் எந்த அரசியல் கருத்தும் கூறுவதற்கு விருப்பமில்லை. கரூர் விவகாரம் தொடர்பாக தங்களது என்டிஏ அமைத்த குழு அறிக்கை அளித்துள்ளது. மேலும் 2 தனியார் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களை முடக்கும் நோக்கத்தில் அரசு கேபிளிலிருந்து தொலைக்காட்சிகள் மறைக்கப்பட்டு வருவதாகவும், இந்த போக்கு எமர்ஜென்சி காலகட்டத்தை ஞாபகப்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
திமுகவை பொருத்தவரை அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டால் தப்பில்லை, உண்மையை பேசினால் அவர்கள் மீது வன்மத்தை திணிப்பதாகவும், ஒடுக்கு முறையை கையாள்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.