வக்ஃபு வழக்கில் திமுக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்!
மத்திய பாஜக அரசின் வக்ஃபு சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. திமுக, முஸ்லிம் லீக், தவெக, மஜ்லிஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பாக 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வக்ஃபு சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது. புதிய வக்ஃபு சட்டத்தின் கீழ் எந்த ஒரு நடவடிக்கையும் நியமனங்களும் மே 5-ந் தேதி வரை நடைபெறக் கூடாது என உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் மனுதாரர்கள் பதில் மனுத் தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனடிப்படையில் வக்ஃபு சட்டத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்நிலையில் திமுக இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில்,
“வக்ஃபு சட்ட திருத்தம் இஸ்லாமியர்களின் மத உரிமையை பறிக்காது என்ற மத்திய அரசின் பதில் வாதங்கள் உண்மைக்கு புறம்பானது. இந்த சட்ட திருத்தம் வக்ஃபு சொத்துக்களை கைப்பற்றும் விதமாகவே உள்ளது. வக்ஃபு சட்டத் திருத்தம் அரசியலமைப்பு வழங்கி இருக்கக்கூடிய அடிப்படை உரிமையான மத சுதந்திரத்திற்கு எதிராக உள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக இருக்கக்கூடிய வகுப்பு சட்டத் திருத்தத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் வாதத்தை நிராகரிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.