திருப்பத்தூரில் மின்சாரம் தாக்கி மீன் வியாபாரி உயிரிழப்பு!
திருப்பத்தூரில் மின்கம்பியைப் பிடித்ததில் மீன் வியாபாரி உயிரிழந்தார். போதிய பராமரிப்பு இல்லாததே காரணம் என வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மீன் சந்தையில் மீன் வாங்கி வியாபாரம் செய்வதற்காகக் கிருஷ்ணன்(48) அதிகாலை 3.45 மணியளவில் மீன் சந்தைக்கு வந்துள்ளார். இவர் திருப்பத்தூர் மீன் சந்தையில் மீன் எடுத்து காரைக்குடி, கோவிலூர், புதுவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்வதும், காரைக்குடியில் கடை போட்டு விற்பனை செய்தும் வருகின்றார்.
இவர் வழக்கம்போல இன்று திருப்பத்தூரில் மீன் வாங்குவதற்காக வந்துள்ளார். மீன்களை வாடகை வாகனத்தில் ஏற்ற முயலும்பொழுது சகதியில் வலுக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால், கடை வாசலில் ஊண்டியிருந்த கம்பியைப் பிடித்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அந்த கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கு இருந்த வியாபாரிகள் உடனடியாக அவரை 108 ஆம்புலன்சில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர். இந்நிலையில் மீன் வியாபாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீன் சந்தை சகதியாக இருப்பதாகவும், போதிய பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாததே வியாபாரி கிருஷ்ணன் உயிரிழப்பிற்குக் காரணம் என மீன் வியாபாரிகளும் பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இச்சம்பவம் குறித்துத் திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.