திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் | மத்திய அரசு நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு வஞ்சனை காட்டுவதாக கண்டன தீர்மானம்!
சென்னையில் நடைபெறும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மத்திய பாஜக அரசு நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு வஞ்சனை காட்டுவதாக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணியளவில் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என மொத்தம் உள்ள 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வென்றதை ஆவணமாக பதிவு செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய நாடாளுமன்ற தேர்தல்-2024 40/40 தென் திசையின் தீர்ப்பு என்ற நூலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்று கொண்டார்.
இதனை அடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:
1) கடந்த 10 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றியைத் தேடித்தந்த திமுக தலைவருக்கு வாழ்த்துகள்- கழக நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு நன்றி.
2) செப்டம்பர் 17 அன்று திமுக தொடங்கப்பட்ட சென்னையில் முப்பெரும் விழா கூட்டம் - தமிழ்நாடு முழுவதும் சுவர் விளம்பரங்கள், தெருமுனைக் கூட்டங்கள், கொடிக்கம்பங்கள் புதுப்பிப்பு.
3) முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி ரூ.100 நாணயம் வெளியிடும் மத்திய அரசுக்கு நன்றி.
4) அதே சமயம் நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு வஞ்சனை காட்டும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம்.
உள்ளிட்ட தீர்மானங்கள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், தொடர்ந்து நடைபெற்று வரும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவரங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திமுகவின் முப்பெரும் விழாவான, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா , பெரியார் பிறந்த நாள், திமுக தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து பல வாரங்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக எப்போது பதவி ஏற்பார் என்ற விவாதங்கள் எழுந்தது. இது தொடர்பாக திமுக அமைச்சர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். இதற்கு நேரடியாகவே பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், எதுவாக இருந்தாலும் முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார் எனக் கூறியிருந்தார்.
இதுமட்டுமல்லாமல் கட்சி வளர்ச்சி குறித்தும், 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. இதுமட்டுமல்லாது ஏற்கனவே திமுக சுமார் 70க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் இருக்கும் நிலையில், சென்னையில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கும் மாவட்டங்களில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்க திமுக தலைமை திட்டமிட்டு இருக்கும் நிலையில் அதற்கான விவாதங்களும் இருக்கும். அப்படி நியமனம் செய்யப்பட்டால் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 115-ஐ கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.