"நாட்டின் ஒற்றுமைக்காக திமுகவும் - காங்கிரஸும் ஒரே அணியில் பயணிக்கிறது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை தேனாம்பேட்டையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராஜா சொக்கரின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "திமுக ஆட்சியில் தான் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் எப்படி பேச வேண்டும் என எனக்கு பாடம் எடுத்தவர் சொக்கர்.
இதையும் படியுங்கள் : சென்னைக்கு 520 கி.மீ. தொலைவு.. வேகமெடுக்கும் ‘மோன்தா’ புயல்!
காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராக விளங்கும் ராகுல் காந்தி, தனிப்பட்ட முறையில் என்மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் ராகுல் காந்தியை ‘அருமைச் சகோதரர்’ என்றே குறிப்பிடுவேன். காரணம், அவர் எப்போது என்னுடன் பேசினாலும், 'My Dear Brother' என்றே என்னை அழைப்பார். திமுக-வும் - காங்கிரஸும் தற்போது கொள்கை உறவுகளாக பயணிக்கிறோம். நாட்டின் ஒற்றுமைக்காக ஒரே அணியில் பயணித்து கொண்டிருக்கிறோம். ராகுல் காந்தியை தவிர யாரையும் நான் சகோதரர் என்று அழைத்தது இல்லை. தனி மனித நலனை விட நாட்டின் நலனே முக்கியம் என்று இரு கட்சிகளின் உறவு தொடர்கிறது"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.