For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கொள்கைக்காக திமுக கூட்டணியில் விசிக உள்ளது” - திருமாவளவன் எம்.பி. பேச்சு!

03:42 PM Oct 07, 2024 IST | Web Editor
“கொள்கைக்காக திமுக கூட்டணியில் விசிக உள்ளது”   திருமாவளவன் எம் பி  பேச்சு
Advertisement

கொள்கைக்காக துணிச்சலுடன் திமுக கூட்டணியில் விசிக உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை வேப்பேரி YMCA அரங்கில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள CSI - SYNOD முன்னாள் பொதுச்செயலாளர், வழக்கறிஞர் பெர்ணான்டஸ் ரத்தின ராஜாவுக்கு பாராட்டு விழா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. CSI - TA இணைந்து கட்டுவோம் சீர்திருத்த ஐக்கிய குழு, தலித் கிறிஸ்துவர் விடுதலை இயக்கம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் மக்கள் மன்றம் சார்பில் இந்த விழா நடத்தப்பட்டது.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் திராவிடன் விஜய் போஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.வி.கே.எஸ்.இளங்கோவன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி மு.நாசர், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, விசிக துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ், மநீம கட்சித் துணைத் தலைவர் மௌரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்ச்சி மேடையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்,

“கிறிஸ்துவ சமூக கட்டமைப்புக்குள் தலித்துகள் பெரும்பான்மையாக இருந்தாலும் அவர்கள் அதிகார மையத்தை நெருங்க அதிகம் போராட வேண்டியுள்ளது என இனிகோ இருதயராஜ் தெரிவித்தார். பொதுவாக அதிகாரத்தை நோக்கி பயணிக்கும் பொழுது எல்லாருக்கும் இத்தகைய போராட்டம் இருந்தாலும், தலித் என்ற பெயர் கூடுதல் போராட்டத்தை கொடுக்கிறது. வதந்திகளை, எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும். பெரும்பாடு பட்டு தான் ஆட்சி பீடத்திற்கு வர வேண்டும்.

எல்லா பரிந்துரைகளும் செல்லுபடி ஆவதில்லை. பரிந்துரைக்க கூடிய நபர் அதற்கு தகுதி உடையவராக இருக்க வேண்டும். இந்த பொறுப்புக்கு இவர் சரியாக இருப்பார் என்று உணர்ந்து தான் முதலமைச்சர் ரத்தன ராஜாவை தேர்வு செய்துள்ளார். இப்படி ஒரு அமைப்பு இருப்பதே பலருக்கு, ஏன் கிருஸ்துவ சமூகத்துக்கே தெரியாது. தமிழ்நாட்டில் உள்ள பௌத்தர்கள் நாக்பூர் சென்று திரும்ப செலவை தமிழக அரசு முதல்முறையாக ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டுக்குள் சுருங்கி விட கூடாது, தலித் சிறுபான்மையினரை ஒன்று சேர்க்கும் பொறுப்பு எனக்கு இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கட்டளையிட்டார்.

இங்கு போராடுவது போல் ஆந்திராவில் நடக்கும் வன்கொடுமைகளை எதிர்த்து போராடி உள்ளேன். ஆணவ கொலைகள் நடக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்து விசிக சார்பில் நிதி உதவி அளித்துள்ளோம். ஆந்திரா, தெலங்கானா மட்டுமல்ல கேரளாவிலும், மராட்டிய மாநிலத்திலும் கூட போராட்டம் நடத்தியுள்ளோம். சிறுபான்மை இனம் எங்கு பாதிக்கப்பட்டாலும் அங்கு விசிக களத்தில் நிற்கும்.

திமுக கூட்டணியில் விசிக இணைந்து 7 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பயணித்து கொண்டு உள்ளது. ஆளும் கட்சி கூட்டணியில் இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை தொடர்ந்து எழுப்பி வருகிறது விசிக. இது தொடர்பாக புரிதல் திமுகவுக்கும், விசிகவுக்கும் உண்டு. இது தான் அரசியல் முதிர்ச்சி.

உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சொல்வார் அது போல் தான். எல்லா காலத்திலும் திராவிட அரசியலுக்கு எதிராக சதி வலை பின்னப்படுகிறது. திமுக குறிப்பாக கருணாநிதிக்கு எதிராக எவ்வளவோ களங்கள் பரப்பப்பட்டன, அனைத்தையும் தாண்டி திமுக வெற்றி பெற என்ன காரணம். ராஜிவ் காந்தி கொலைக்கு காரணம் என்று திமுகவை சொன்னார்கள். அலுவலகத்தை சூறையாடினார்கள். எப்படி திமுக உயிர் பெற்றது? மிசா காலத்தில், வைகோ சென்ற போது அதேயே தான் சொன்னார்கள். இது திமுகவுக்கு வக்காலத்து வாங்கும் பேச்சல்ல. அவதூறு, வதந்திகளால் ஒரு கட்சியை வீழ்த்தி விட முடியாது.

போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் கருணாநிதி வெற்றி பெற்றார். விசிக கொள்கைக்காக துணிச்சலுடன் திமுக கூட்டணியில் உள்ளது”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement