நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!
2025-2026-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த மாதம் (பிப்ரவரி) 1-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், 13-ம் தேதி வரை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முதல் அமர்வில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இந்த சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நேற்று (மார்ச் 10) தொடங்கியது.
இதில், உரையாடிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து திமுக எம்.பி.-க்கள் தன்னை சந்தித்தபோது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தயாராக இருந்துவிட்டு மீண்டும் அரசியல் செய்கிறார்கள் என்றும் நாகரீகமற்றவர்கள் என்றும் விமர்சனம் செய்தார். இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இதனிடையே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவபொம்மையை எரித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி, தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார். இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாடு எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.