தேமுதிக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!
ரமலான் நோன்பினை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
“புனித ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகள் அதிகம் செய்யும் மாதம், சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் என்று, இஸ்லாமியர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. புனிதமும், கண்ணியமும் மிக்க சிறப்பு வாய்ந்த ரமலான் மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பினை மேற்கொள்கின்றனர்.
வகுப்பு ஒற்றுமையை பேணுகின்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) (22.03.2025) சனிக்கிழமை மாலை 6 மணியாவில் கொண்டாடப்படும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
அது சமயம் இஸ்லாமிய பெருமக்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் திரளாக வருகை தந்து, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.