”தேமுதிக 2.0 தொடங்குகிறது” - விஜய பிரபாகரன் பேச்சு!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடித்துள்ள திரைப்படம் படைத்தலைவன். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை அன்பு என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற மே 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
முன்னதாக இப்படத்தில் இருந்து டிரெய்லர், லிரிக்கல் வீடியோ பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மூத்த மகனும் தேமுதிக இளைஞர் அணி செயலாளருமான விஜய பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது விஜய பிரபாகரன் பேசியதாவது, “ தேமுதிக 2.0 தொடங்குகிறது. கேப்டன் விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் செய்வோம். அது சினிமாவாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி. விஜயகாந்தை போல சண்முக பாண்டியனும் உங்கள் சொத்துதான். நான் தான் அப்பாவுக்கு முதல் ரசிகன். இப்போது சன்முகபாண்டியனுக்கும் நானே முதல் ரசிகன்” இவ்வாறு அவர் கூறினார்.